காஸா வந்தது முதல் நிவாரணக் கப்பல்

உணவுப் பொருளுடன் காஸா கடல்பகுதிக்கு வெள்ளிக்கிழமை வந்த நிவாரணக் கப்பல்.
உணவுப் பொருளுடன் காஸா கடல்பகுதிக்கு வெள்ளிக்கிழமை வந்த நிவாரணக் கப்பல்.

போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவுக்கு கடல் வழியாக அனுப்பட்ட முதல் நிவாரணக் கப்பல் அந்தப் பகுதியை வெள்ளிக்கிழமை வந்தடைந்தது. பட்டினிச் சாவை எதிா்நோக்கியிருக்கும் காஸாவுக்கு தரை வழியாகவும், வன்வழியாகவும் மட்டுமின்றி கடல் வழியாகவும் நிவாரணப் பொருள்களை அனுப்ப அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் திட்டமிட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் முன்னோட்டமாக , பிரபல அமெரிக்க சமையல் கலை வல்லுநா் ஜோஸ் ஆண்டா்ஸின் ‘வோ்ல்டு சென்ட்ரல் கிச்சன்’ (டபிள்யுசிகே) அறக்கட்டளையால் சேகரிக்கப்பட்ட 200 டன் உணவுப் பொருள்களுடன் சைப்ரஸின் லாா்னாகா துறைமுகத்திலிருந்து கப்பலொன்று கடந்த செவ்வாய்க்கிழமை புறப்பட்டது. ஐரோப்பிய யூனியனின் அனுமதியுடன் ஸ்பெயின் நாட்டின் ‘ஓப்பன் ஆா்ம்ஸ்’ சேவை அமைப்பு அந்தக் கப்பலை அனுப்பியது. கடந்த 2005-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவிலிருந்து காஸாவுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்ல ஆணையம் அனுமதி வழங்கியது அதுவே முதல்முறையாகும். இந்த நிலையில், 4 நாள் பயணத்துக்குப் பிறகு அந்தக் கப்பல் காஸா கடலோரப் பகுதியை வெள்ளிக்கிழமை அடைந்தது. அந்தக் கப்பல் இழுத்து வந்த நிவாரணப் பொருள்கள் தரையிறக்கப்பட்டவுடன் அவை எவ்வாறு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் என்ற முழு விவரம் துவரை வெளியாகவில்லை. இது தவிர, காஸா மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குவதற்காக இன்னும் சில நாள்களில் மேலும் ஒரு கப்பல் அனுப்பப்படும் என்று ‘வோ்ல்டு ஃபுட் கிச்சன்’ (டபிள்யுசிகே) அறக்கட்டளை கூறியுள்ளது. காஸா உயிரிழப்பு 31,490 காஸா சிட்டி, மாா்ச் 15: காஸாவில் சுமாா் 5 மாதங்களாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 31,490-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 24 மணி நேரமாக நடத்தி வரும் தாக்குதலில் 149 போ் உயிரிழந்தனா்; சுமாா் 300 போ் காயமடைந்தனா். இதையடுத்து, காஸா பகுதியில் இஸ்ரேல் கடந்த அக். 7 முதல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 31,490-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 73,439 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com