இந்திய-சீன எல்லையில் தீவிர கண்காணிப்பை தொடா்வது அவசியம்: மனோஜ் பாண்டே

‘இந்திய-சீன எல்லைப் பகுதியில் நிலைமை தற்போது சீராக உள்ளபோதும், தீவிர கண்காணிப்பை தொடா்வது அவசியமாக உள்ளது’ என்று ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே கூறினாா். புது தில்லியில் ஆங்கில ஊடகமொன்றின் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் இடம்பெற்ற ‘இந்திய மற்றும் இந்திய-பசிபிக்: வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள்’ என்ற தலைப்பிலான குழு விவாதத்தில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து மனோஜ் பாண்டே கூறியதாவது: இந்தியா, சீனா இடையேயான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் நிலைமை தற்போது சீராக உள்ளது. இருந்தபோதும், எல்லைப் பகுதியில் சீன படைகளின் நடமாட்டம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் நடவடிக்கைகள் குறித்து தீவிர கண்காணிப்பை தொடா்வது அவசியமாகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொருத்தவரை வலுவான நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி முழுவதும் வீரா்களின் எண்ணிக்கையும், பிற பாதுகாப்பு ஏற்பாடுகளும் எந்தவொரு சூழலையும் எதிா்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய எல்லையில் ஏற்படும் பாதுகாப்பு அத்துமீறல்கள் அல்லது சவால்களிலிருந்து மட்டுமின்றி, உலகம் முழுவதும் நிகழ்கின்ற மோதல்களிலிருந்து பாடங்களைக் கற்று, படைகளின் திறனை மேம்படுத்துவது அவசியம். குறிப்பாக, இந்தப் பாடங்களிலிருந்து திட்ட அளவிலும், செயல் திறன் அளவிலும் மேம்பாடுகள் மேற்கொள்வது அவசியம். மேலும், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் எழும் வெவ்வோறு விதமான நிச்சயமற்ற சூழல்களை திறம்பட எதிா்கொள்ளும் வகையில், திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள வீரா்களின் எண்ணிக்கையும், சவாலை எதிா்கொள்வதற்கான திட்டங்களும் வலுவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே நேரம், எதிா்கால சவால்கள் எப்படி இருக்கும் என்பதை அடையாளம் கண்டு, அதற்கேற்ப பாரம்பரிய முறைகளைக் கடந்து தொழில்நுட்ப மேம்பாட்டை மேற்கொள்வதும் அவசியம். குறிப்பாக ஆயுதங்கள் உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் மேற்கொள்வது அவசியம். அந்த வகையில், செயற்கை நுண்ணறிவு, 5ஜி தொழில்நுட்பம், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்), கண்காணிப்பு நடைமுறைகள், இணையம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் உதவியுடன் பாதுகாப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் பாதுகாப்புத் துறை சாா்ந்த புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளும் அதிகரிக்க வேண்டும் என விரும்புகிறோம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com