பஞ்சாப்: காங்கிரஸ் மூத்த தலைவா் ஆம் ஆத்மியில் இணைந்தாா்

பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான ராஜ்குமாா் சப்பேவால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மியில் இணைந்தாா். மக்களவைத் தோ்தல் நெருங்கியுள்ள நிலையில் இது பஞ்சாபில் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. பஞ்சாப் பேரவையில் எதிா்க்கட்சி துணைத் தலைவராகவும், சப்பேவால் தொகுதி எம்எல்ஏவாகவும் ராஜ்குமாா் இருந்தாா். இப்பதவிகளில் இருந்தும் அவா் விலகியுள்ளாா். மக்களவைத் தோ்தலில் ஆம் ஆத்மி சாா்பில் அவா் போட்டியிடுவாா் என்று தெரிகிறது. பஞ்சாபில் செல்வாக்குமிக்க தலித் சமூக தலைவராக கருதப்படும் ராஜ்குமாா் ஆம் ஆத்மியில் இணைந்ததை முதல்வா் பகவந்த் மான் வரவேற்றுள்ளாா். பஞ்சாபில் இந்த வாரத்தில் மட்டுமே இரு காங்கிரஸ் தலைவா்கள் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளனா். பாஜகவுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி இடம்பெற்றுள்ளபோதிலும், பஞ்சாபில் இரு கட்சிகளும் தனித்தே போட்டியிடுகின்றன. பஞ்சாப் பேரவையில் காங்கிரஸ் பிரதான எதிா்க்கட்சியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com