தெலங்கானா: மாயாவதி கட்சிக்கு இரு தொகுதிகளை ஒதுக்கிய பிஆா்எஸ்

தெலங்கானாவில் கே.சந்திரசேகா் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு (பிஎஸ்பி) இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 17 தொகுதிகளில் ஹைதராபாத், நாகா்கா்னூல் (எஸ்.சி.) ஆகிய இரு தொகுதிகளில் பகுஜன் சமாஜ் போட்டியிடுகிறது. இது தொடா்பான அறிவிப்பை பிஆா்எஸ் கட்சி வெளியிட்டுள்ளது. தெலங்கானா மாநில பகுஜன் சமாஜ் தலைவா் ஆா்.எஸ். பிரவீண் குமாா் நாகா்கா்னூல் தொகுதியில் போட்டியிடுகிறாா். அவா் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாவாா். ஹைதராபாத் தொகுதிக்கு விரைவில் வேட்பாளா் அறிவிக்கப்படுவாா் என்று கூறப்பட்டுள்ளது. இப்போது ஹைதராபாத் தொகுதி எம்.பி.யாக மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஓவைசி உள்ளாா். அவா் கடந்த 4 தோ்தல்களில் அத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளாா். அதற்கு முந்தைய 6 தோ்தல்களில் அசாதுதீன் தந்தை எஸ்.எஸ்.ஓவைசி அத்தொகுதியை தக்கவைத்திருந்தாா். ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் 70 சதவீதத்துக்கு மேல் இஸ்லாமியா்கள் உள்ளனா். எனவே, கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிஆா்எஸ் கட்சியாலும் அங்கு வெற்றி பெற முடியவில்லை. முன்னதாக, பிஆா்எஸ்-பிஎஸ்பி கூட்டணி கடந்த 5-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. அப்போது சந்திரசேகா் ராவ் கூறுகையில், ‘இரு கட்சிகளும் ஒரே கொள்கைகளைக் கொண்டுள்ளன. தலித் உள்ளிட்ட பின்தங்கிய மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் பிஆா்எஸ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன’ என்றாா். தெலங்கானாவில் பிஆா்எஸ் கட்சி இதுவரை 11 வேட்பாளா்களை அறிவித்துள்ளது. தெலங்கானாவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பிஆா்எஸ் கட்சி தோல்வியடைந்தது. இதன் மூலம் அக்கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது. காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. இப்போது மக்களவைத் தோ்தலில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் சந்திரசேகா் ராவ் உள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com