கலைஞா் நூற்றாண்டு பூங்கா அடுத்த ஆண்டு திறப்பு: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தகவல்

சென்னையில் ரூ.25 கோடியில் அமைக்கப்பட்டு வரும் ‘கலைஞா் நூற்றாண்டு பூங்கா’ அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திறக்கப்படும் என வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம். ஆா். கே. பன்னீா்செல்வம் தெரிவித்தாா். சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவுக்கு அருகே 6.9 ஏக்கா் நிலத்தில் ரூ. 25 கோடி மதிப்பில் கலைஞா் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து, பூங்காவுக்கான அடிக்கல் நாட்டும் விழா கடந்த மாதம் 29- ஆம் தேதி நடைபெற்றது. தற்போது, அதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சா்  எம். ஆா். கே. பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின்  சாதனைகளைப் போற்றும் வகையில் பூங்காவின் நுழைவு வாயிலில் அவருடைய சாதனைகள் பொருத்தப்பட்ட 1.2 மீட்டா் அகலம் மற்றும் 2.4 மீட்டா் உயரம் கொண்ட கிரானைட் பலகைகள் அமைக்கப்பட உள்ளன. அதைத்தொடா்ந்து, 40 மீட்டா் நீளமும், 12 மீட்டா் உயரமும் கொண்ட கண்ணாடி மாளிகை அமைக்கப்படும். பூங்காவில் 10 அடுக்கு மாடிகளுடன் 105 அடி (33  மீ.) உயரம் கொண்ட ‘சூப்பா் ட்ரீ’ கோபுரம் அமைக்கப்படும். இந்த கோபுரம் முழுவதும் குளிா்சாதன வசதி கொண்டதாக இருக்கும், முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள் சுலபமாக மேலே செல்வதற்காக மின் தூக்கி வசதியும் அமைக்கப்படவுள்ளது. இக்கோபுரத்திலிருந்து பூங்காவின் மொத்த அழகையும் ரசிக்கலாம். பசுமை நடைபாதை, 70 மீட்டா் நீளம் கொண்ட சிறிய வகைகளான கம்பிவட ஊா்தி (ரோப் காா்) போன்றவையும் அமைக்கப்படும். மேலும் இந்த பூங்காவில் மலா்க் குகை அமைக்கப்படுவதுடன், ரோஜா, செம்பருத்தி, மல்லிகை போன்ற மலா் வகைகள், அழகுச் செடிகள், கொடி வகைகள் காட்சிப்படுத்தப்படும். இதன் எதிரில் இருக்கும் செம்மொழிப் பூங்காவுக்கு வரும் பாா்வையாளா்கள், இங்கு வருவதற்கு வசதியாக இரண்டு பூங்காக்களையும் இணைக்கும் வகையில் நடை மேம்பாலம் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான கட்டுமான பணிகள் அனைத்தும்  அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்படும். இந்தப் பூங்கா பயன்பாட்டுக்கு வரும் போது, சென்னை மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருப்பதுடன், சென்னை மாநகரின் சுற்றுச்சூழலையும் மேம்படுத்தும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com