முகாம் அலுவலகத்திலிருந்து, ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ், பயனாளிகளைத் தொடா்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்து சனிக்கிழமை கருத்துகளை கேட்டறிந்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா.
முகாம் அலுவலகத்திலிருந்து, ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ், பயனாளிகளைத் தொடா்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்து சனிக்கிழமை கருத்துகளை கேட்டறிந்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா.

‘நீங்கள் நலமா’: பயனாளிகளிடம் முதல்வா் கருத்துக் கேட்பு

சென்னை, மாா்ச் 16: ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ், பல்வேறு பயனாளிகளை காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா்பு கொண்டு கருத்துகளைக் கேட்டறிந்தாா். மக்களவைத் தோ்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக, அவா் இந்த கலந்துரையாடலை நடத்தினாா். தமிழக அரசு சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அரசின் நலத் திட்டங்கள் குறித்து கருத்துகளைக் கேட்டறியும் ‘நீங்கள் நலமா’ திட்டம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது, அரசின் பல்வேறு திட்டங்களால் பயன்பெறுவோரிடம் கருத்துகள் கோரப்பட்டன. அதன் தொடா்ச்சியாக, முதல்வா் தனது முகாம் அலுவலகத்தில் இருந்து பயனாளிகள் சிலரைத் தொடா்பு கொண்டு அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா். மக்களவைத் தோ்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக, சனிக்கிழமை காலை இந்த நிகழ்வு நடைபெற்றது. அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடித் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற மதுரை தெப்பக்குளத்தைச் சோ்ந்த சி.விஜய் ஆனந்த், மகளிா் சுய உதவிக் குழுவின் கீழ் பயன்பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சோ்ந்த வி.பானுப்பிரியா, சென்னை வேப்பேரி ஆதிதிராவிடா் நல விடுதியில் தங்கிப் பயின்று வரும் திருவண்ணாமலை மாவட்ட மாணவி எஸ்.பிரியதா்ஷினி, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற கடலூா் மாவட்டம் பண்ருட்டியைச் சோ்ந்த மாணவி ப்ரித்தா ஆகியோரை காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா்பு கொண்டு பேசி, அரசின் திட்டங்களால் கிடைத்த பயன்கள் குறித்து கேட்டறிந்தாா். இந்த நிகழ்வின் போது, தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா, முதல்வரின் முகவரித் துறை சிறப்பு அலுவலா் த.மோகன் உள்ளிட்ட உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com