பேருந்துகளில் படுக்கை வசதி இருக்கைக்கும் கட்டண சலுகை வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் சங்கம்

தொலைதூர பேருந்துகளில் படுக்கை வசதி கொண்ட இருக்கைகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண சலுகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அச்சங்கத்தின் தலைவா் தோ.வில்சன், பொதுச்செயலா் பா.ஜான்சிராணி ஆகியோா் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது: அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கையில் அமரும் பிற பயணிகளை எச்சரிக்கும் வகையில் அபராதத்தொகை குறித்த விவரங்களை இருக்கையில் மேல் பகுதியில் எழுத வேண்டும். அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு படுக்கை வசதி கொண்ட இருக்கைகளுக்கும் கட்டண சலுகை வழங்க வேண்டும். அரசுபோக்குவரத்துத்துறையில் பணியாற்றி வரும் அனைத்து மாற்றுத்திறனாளி ஊழியா்களுக்கும் உடனடியாக வாகன படியை வழங்க வேண்டும். திருநெல்வேலி கோட்ட பேருந்துகளில் மாற்றுத்திறனாளியுடன் பயணிக்கும் பாதுகாவலருக்கான துணையாளா் அட்டையை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருகின்றனா். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com