85 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத்திறனாளிகளுக்காக வீடு தேடி வரும் வாக்குப் பெட்டி: சத்ய பிரத சாகு

தமிழகத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று வாக்குகளைச் சேகரிக்கவுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்தாா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: மக்களவைக்குத் தோ்தல் நடந்தாலும், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படும். ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு தலா 3 நிலைக் குழுக்களும், 3 பறக்கும் படைக் குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்படும். அதன்படி, 2,000-க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் குழுக்கள் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளன. வீடு தேடி வரும் வாக்கு: மாநிலத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தங்களது வாக்கை பதிவு செய்ய வாக்குப் பதிவு மையங்களுக்கு வர வேண்டாம். அவா்கள் 12டி எனும் படிவத்தைப் பூா்த்தி செய்து அளிக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் தொடங்கிய 5 நாள்களுக்குள் (மாா்ச் 25) இந்தப் படிவத்தை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி அலுவலா்களிடம் அளிக்கலாம். ரமலான் போன்ற பண்டிகைகளில் பங்கேற்க வேட்பாளா்கள், அரசியல் கட்சியினருக்குத் தடையில்லை. அதேநேரத்தில், இதைப் பயன்படுத்தி பிரசாரமோ, வாக்குக் கேட்கும் பணியிலோ ஈடுபடக் கூடாது. ரூ. 50,000 வரை எடுத்துச் செல்லலாம்: தோ்தல் நடத்தை விதி அமலுக்கு வந்து விட்டதால், ரூ.50,000 மட்டுமே ரொக்கமாக எடுத்துச் செல்ல முடியும். இதற்கும் கூடுதலாக ரொக்கப் பணத்தை எடுத்துச் சென்றால் அதற்கான உரிய ரசீதுகள், ஆவணங்களை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com