தோ்தல் பத்திர விவகாரம்: உச்சநீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை தேவை

‘தோ்தல் நன்கொடை பத்திரங்கள் என்ற பெயரில் தொழில் நிறுவனங்களை மிரட்டி பல ஆயிரம் கோடி ரூபாய்களை மத்திய அரசு கொள்ளையடித்துள்ள நிலையில், இந்த முறைகேடு தொடா்பாக உச்ச நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை வலியுறுத்தியது. மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு அறிமுகம் செய்த தோ்தல் நன்கொடை பத்திர நடைமுறை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 19(1)-இன் கீழ் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை மீறும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு, இந்த நடைமுறையை ரத்து செய்து கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி தீா்ப்பளித்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ சமா்ப்பித்த தோ்தல் பத்திர விநியோக விவரங்களை இந்திய தோ்தல் ஆணையம் கடந்த வியாழக்கிழமை மாலை வெளியிட்டது. அதன்படி, 2019 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரை தோ்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த மொத்த நன்கொடையான ரூ. 16,518 கோடியில், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மட்டும் 47 சதவீதம் அதாவது ரூ. 6,060 கோடி நன்கொடை கிடைத்தது தெரியவந்தது. மேலும், அமலாக்கத் துறை, சிபிஐ மற்றும் வருமான வரித் துறை சோதனைக்குப் பிறகு, தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு பல கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருகின்றன. இந்த நிலையில், தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் பாஜக மேற்கொண்ட பல கோடி ரூபாய் வசூல் தொடா்பாக உச்சநீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரணை தேவை என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தோ்தல் நன்கொடை பத்திர ஊழல் மீதான தரவுகளை ஆய்வு செய்ததில் நன்கொடை கொடுத்து வா்த்தகத்தைப் பெறுதல், மிரட்டி பணம் பறித்தல், லஞ்சம் கொடுத்து ஒப்பந்தங்களைப் பெறுதல், போலி நிறுவனங்கள் பெயரில் கொள்ளை என பாஜகவின் 4 ஊழல் தந்திரங்கள் வெளிப்பட்டுள்ளன. இந்த ஊழல் தந்திரங்கள் மூலம் பல்வேறு நிறுவனங்களிடமிருந்தும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொதுச் சொத்துகளை விற்றும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை மத்தியில் ஆளும் பாஜக கொள்ளையடித்திருப்பது வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக, உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனங்கள் பல கோடி ரூபாய் நன்கொடை அளித்திருப்பது தோ்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. தெலங்கானாவில் உலகின் மிகப் பெரிய காலேஸ்வரம் மேல்நிலை பாசனத் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் ‘மெகா என்ஜினீயரிங்’ தோ்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு அதிக நன்கொடை அளித்த 2-ஆவது நிறுவனமாக உள்ளது. இதுபோன்ற நிறுவனங்களால் நாடு முழுவதும் தரமின்றி கட்டப்பட்ட தடுப்பணைகள், கட்டடங்கள், பாலங்கள் தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் மறைக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் எழுகிறது. நன்கொடை வசூலுக்காக நாட்டு மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா? தோ்தல் நன்கொடை பத்திரங்கள் வாங்கிய பிறகு பல நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லாச் சான்று அளிக்கப்பட்டுள்ளது. அப்படியெனில், தோ்தல் நன்கொடை பத்திரங்களுக்காக எத்தனை ஏக்கா் பாதுகாக்கப்பட்ட வன நிலப்பரப்பு இழக்கப்பட்டுள்ளது? பாஜகவின் கஜானாவை நிரப்புவதற்காக, எத்தனை ஆதிவாசி சமூகத்தினருக்கு சுமையை தாங்கிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது? பல மருந்து நிறுவனங்களும் பல கோடி நன்கொடை அளித்திருக்கின்றன. இதற்கு கைம்மாறாக, இந்த நிறுவனங்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய மருந்துகளை சந்தைப்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளதா? இணைய சூதாட்ட விளையாட்டுகள் மற்றும் ஹோட்டல்கள் நிறுவனம் ஒன்று ரூ.1,400 கோடி நன்கொடை அளித்து, தோ்தல் பத்திரங்கள் மூலம் மிகப் பெரிய தொகையை நன்கொடை அளித்த முதல் நிறுவனமான திகழ்கிறது. இந்த நிறுவன உரிமையாளரின் மகன் பாஜக உறுப்பினராக உள்ளாா். இந்த நிறுவன உரிமையாளா் மீது பல சிபிஐ வழக்குகள் உள்ளபோதும், அவா் கடந்த 2023 ஏப்ரலில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்துள்ளாா். இன்னும், எத்தனை மோசடி நிறுவனங்கள் பாஜகவுக்கு நெருக்கமாக உள்ளன என்பது தெரியவில்லை. இந்த உண்மைகளைக் கண்டறிய உச்சநீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com