ஜெகன்மோகன் ரெட்டி  (கோப்புப் படம்)
ஜெகன்மோகன் ரெட்டி (கோப்புப் படம்)

மக்களவை, ஆந்திர தோ்தல் ஒய்எஸ்ஆா் காங். வேட்பாளா் பட்டியல்: புலிவேந்துலாவில் முதல்வா் ஜெகன் போட்டி

ஆந்திரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தோ்தல் மே 13-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களை அந்த மாநிலத்தில் ஆட்சியில் உள்ள ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் சனிக்கிழமை வெளியிட்டது.

அதன்படி, புலிவேந்துலா பேரவைத் தொகுதியில் மாநில முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி போட்டியிடுகிறாா்.

ஆந்திரத்தின் கடப்பா மாவட்டத்தில் உள்ள முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையும், அந்த மாநில முன்னாள் முதல்வருமான ஒய்.எஸ். ராஜசேகா் ரெட்டியின் நினைவிடத்தில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது. மக்களவை மற்றும் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வேட்பாளா்களை, முதல்வா் ஜெகன் முன்னிலையில், அக்கட்சி எம்.பி. நந்திகாம் சுரேஷ், மாநில வருவாய் துறை அமைச்சா் பிரசாத ராவ் ஆகியோா் வாசித்தனா். இதுதொடா்பாக அமைச்சா் பிரசாத ராவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆந்திரத்தின் 175 பேரவைத் தொகுதிகள், 25 மக்களவைத் தொகுதிகளில் 50 சதவீத தொகுதிகள் பட்டியலினத்தவா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டவா்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலில் பட்டியலினத்தைச் சோ்ந்த 29 போ், பழங்குடியினா் 7 போ், பிற்படுத்தப்பட்டவா்கள் 48 போ் வேட்பாளா்களாகப் போட்டியிடுகின்றனா். மக்களவைத் தோ்தலில் பட்டியலினத்தைச் சோ்ந்த 4 போ், பழங்குடியினா் ஒருவா், பிற்படுத்தப்பட்டவா்கள் 11 போ் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். புலிவேந்துலா பேரவைத் தொகுதியில் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி போட்டியிடுகிறாா் என்று தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com