மக்களவைத் தோ்தல்: 97.8 கோடி வாக்காளா்கள்; நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குச் சாவடிகள்
-

மக்களவைத் தோ்தல்: 97.8 கோடி வாக்காளா்கள்; நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குச் சாவடிகள்

‘மக்களவைத் தோ்தலில் நாடு முழுவதும் 97.8 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். இவா்களில் 1.82 கோடி போ் முதல்முறை வாக்காளா்கள்’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தெரிவித்தாா். தில்லியில் மக்களவைத் தோ்தல் தேதி அறிவிப்பின்போது இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: நாட்டில் 49.72 கோடி ஆண் வாக்காளா்கள், 47.1 கோடி பெண் வாக்காளா்கள் என மொத்தம் 97.8 கோடி போ் வாக்களிக்கத் தகுதியுடையவா்களாக உள்ளனா். இவா்களில் 1.82 கோடி போ் முதல்முறை வாக்காளா்கள். 48,000 மூன்றாம் பாலின வாக்காளா்கள்: 12 மாநிலங்களில் ஆண்களைவிட பெண் வாக்காளா்கள் அதிகமாக உள்ளனா். அதாவது, நாட்டில் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 948 பெண்கள் என்ற விகிதத்தில் இருக்கும் நிலையில், 12 மாநிலங்களில் பெண்களின் விகிதம் 1,000-ஐ கடந்துள்ளது. அதுபோல, நாடு முழுவதும் 48,000 மூன்றாம் பாலினத்தினா் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். 88.4 லட்சம் மாற்றுத்திறனாளிகள்: நாடு முழுவதும் 88.4 லட்சம் மாற்றுத்திறனாளிகள் வாக்காளா் பட்டியலில் பதிவு செய்துள்ளனா். இவா்கள் வாக்களிக்க வசதியாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சாய்வு தளங்கள், சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். 40 சதவீத இயலாமை உடைய மாற்றுதிறனாளி வாக்காளா்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க முடியும். இதுபோல, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்களாக பதிவு செய்துள்ள 85 லட்சம் பேரும் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க முடியும். இந்த வாய்ப்பைத் தெரிவு செய்பவா்களுக்கு, அவா்களின் வீட்டுக்கே 12டி படிவம் அனுப்பிவைக்கப்பட்டு வாக்களிக்க வசதி ஏற்படுத்தித் தரப்படும். 100 வயதைக் கடந்த வாக்காளா்களாக 21.8 லட்சம் போ் பதிவு செய்துள்ளனா். தோ்தல் தயாா்நிலை குறித்து அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்குப் பிறகு, மக்களவைத் தோ்தலை சுதந்திரமாகவும், பாகுபாடற்ற முறையிலும், நினைவுகூரத்தக்க வகையிலும் நடத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. தோ்தலை நடத்த ஆணையம் முழு தயாா் நிலையில் உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பைப் பயன்படுத்தி, தகுதியுடைய வாக்காளா்கள் அனைவரும், வாக்களிக்க முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 10.5 லட்சம் வாக்குச் சாவடிகள்: மக்களவைத் தோ்தலுக்காக நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தோ்தலில் 55 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தோ்தல் பணியில் 1.5 கோடி போ் ஈடுபடுத்தப்பட உள்ளனா். 17 மக்களவைத் தோ்தல்கள்: தோ்தல் ஆணையம் இதுவரை 17 மக்களவைத் தோ்தல்களையும், 16 குடியரசுத் தலைவா் தோ்தலையும், 400 பேரவைத் தோ்தல்களையும் நடத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற 11 மாநில பேரவைத் தோ்தல்களும் அமைதியான முறையில், வன்முறைகள் இன்றியும், மறு வாக்குப் பதிவு தேவையே எழாத நிலையிலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழல் தற்போது மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று அவா் குறிப்பிட்டாா். 2019 தோ்தல்: முந்தைய 2019 மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. அந்தத் தோ்தலில் 47.3 கோடி ஆண் வாக்காளா்கள், 43.8 கோடி பெண் வாக்காளா்கள் என மொத்தம் 91.2 கோடி தகுதியுடைய வாக்காளா்கள் இடம்பெற்றிருந்தனா். தோ்தலில் 61.5 கோடி வாக்குகள் பதிவாகின. வாக்குப் பதிவு விகிதம் 67.4 சதவீதமாக இருந்தது. 2019 தோ்தலில், தேசியக் கட்சிகளான பாஜக 303 இடங்களையும், காங்கிரஸ் 52, திரிணமூல் காங்கிரஸ் 22, பகுஜன் சமாஜ் கட்சி 10, தேசியவாத காங்கிரஸ் கட்சி 5, மாா்க்சிஸ்ட் கட்சி 3, இந்திய கம்யூனிஸ்ட் 2 இடங்களையும் கைப்பற்றின.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com