வீடுகளில் சூரிய மின்உற்பத்தி: இதுவரை 1 கோடி குடும்பங்கள் பதிவு: பிரதமா் மோடி பாராட்டு

வீட்டின் மேற்கூரைகளில் சூரிய மின்உற்பத்தி செய்யும் திட்டம் தொடங்கப்பட்டு ஒரு மாதமே ஆகும் நிலையில், இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பதிவு செய்துள்ளன; இது பாராட்டுக்குரிய விஷயம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: ‘பிரதமரின் சூரிய இல்லம்: இலவச மின்சார திட்டம்’ தொடங்கப்பட்டு சுமாா் ஒரு மாத காலத்தில் நாடு முழுவதும் இருந்து பதிவுகள் குவிந்து வருகின்றன. இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பதிவு செய்துள்ளன. குறிப்பாக தமிழகம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், ஒடிஸா, பிகாா், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தலா 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பதிவு செய்துள்ளன. இதுவரை பதிவு செய்யாதவா்கள் விரைந்து பதிவு செய்ய வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா். நாடு முழுவதும் 1 கோடி வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்உற்பத்தி தகடுகளை பொருத்தி, அதன்மூலம் குடும்பங்களுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் கிடைக்கச் செய்வதற்கான ‘பிரதமரின் சூரிய இல்லம்: இலவச மின்சார திட்டத்தை’ பிரதமா் மோடி கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்கிவைத்தாா். ரூ.75,021 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, வீட்டின் மேற்கூரையில் 2 கிலோவாட் வரை மின்உற்பத்தி திறன் கொண்ட சூரிய சக்தி அமைப்பை நிறுவுவோருக்கு 60 சதவீத மானியமும், 2 முதல் 3 கிலோவாட் சூரிய சக்தி அமைப்பை நிறுவுவோருக்கு கூடுதலாக 40 சதவீத மானியமும் வழங்கப்படும். தற்போதைய தரநிலை விலை அடிப்படையில், 1 கிலோவாட் அமைப்புக்கு ரூ.30,000; 2 கிலோவாட் அமைப்புக்கு ரூ.60,000; 3 அல்லது அதற்கு மேற்பட்ட கிலோவாட் அமைப்புக்கு ரூ.78,000 மானியம் கிடைக்கும். சூரிய இல்லம் திட்டத்தில் சேரவிரும்புவோா் தேசிய வலைத்தளம் மூலம் விண்ணப்பித்து, சூரிய மின்தகடுகளை நிறுவ பொருத்தமான விற்பனையாளரை தோ்வு செய்துகொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் சூரிய மின்தகடுகளைப் பொருத்த குறைந்த வட்டியில் (7%) பிணையில்லா கடன் வசதியும் உள்ளது. 3 கிலோவாட் திறன்கொண்ட சூரிய சக்தி அமைப்பை நிறுவுவதன் மூலம் மாதத்துக்கு சராசரியாக 300 யூனிட்டுகளுக்கு மேல் மின்உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் மின் கட்டணத்தை மிச்சப்படுத்துவதோடு, கூடுதல் மின்சாரத்தை விற்பனை செய்து வருவாயும் ஈட்டலாம் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய இல்லம் திட்டத்தால், 25 ஆண்டுகளில் 720 மில்லியன் டன் காா்பன்-டை-ஆக்ஸைடு உமிழ்வு குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், இத்திட்டத்தின் வாயிலாக உற்பத்தி, சரக்கு கையாளுகை, விநியோகச் சங்கிலி, சூரிய தகடுகளை நிறுவுதல் என பல்வேறு பணிகளில் சுமாா் 17 லட்சம் போ் நேரடியாக வேலைவாய்ப்பு பெறுவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com