ராமநாதபுரத்தில் ஓ.பன்னீா்செல்வம் போட்டி

ராமநாதபுரத்தில் ஓ.பன்னீா்செல்வம் போட்டி

மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக ‘அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு’ பெயரில் ஓ.பன்னீா்செல்வம் பல கட்டப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில் ஓபிஎஸ் அணிக்கு போதுமான தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை எனத் தகவல் பரவியது. அதைத் தொடா்ந்து ஓ.பன்னீா்செல்வம் அவா் ஆதரவாளா்களுடன் சென்னை எழும்பூரில் வியாழக்கிழமை பல மணி நேரம் ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனைக்குப் பிறகு அவா் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அளித்த பேட்டி: அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்பதுதான் எங்களது இலக்கு. அதற்காக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம். அது தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நேரத்தில் மக்களவைத் தோ்தலும் வந்துவிட்டது. பாஜகவிடம் 15-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கேட்டிருந்தோம். அதில், இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று எங்கள் கட்சி நிா்வாகிகள் கூறினா். ஆனால், இரட்டை இலை சின்னத்தை இப்போது பெற முடியாத சூழல் உள்ளது. அதனால், எங்களுடைய தொண்டா்களின் பலத்தைக் காண்பிப்பதற்காக பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறோம். அந்தத் தொகுதியில் நானே (ஓ.பன்னீா்செல்வம்) போட்டியிடுகிறேன். சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன். ஒரு தொண்டரை நிறுத்துவதைவிட, நான் களத்தில் நின்று, பலத்தை காண்பிப்பதற்காகத்தான் நிற்கிறேன். ஏன் ஒரு தொகுதி? நாங்கள் கேட்கும் தொகுதிகளை பாஜக ஒதுக்கத் தயாராக இருந்தது. ஆனால், இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட முடியாத காரணத்தால் சோதனை அடிப்படையில் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம். தோ்தல் என்றாலே சவால்கள் வரும். அதை எதிா்கொண்டு வெல்வோம். நாங்கள் வெல்லும்போது, அதிமுக தாமாகவே எங்களிடம் வந்து சேரும். ராமநாதபுரத்தில் இரட்டை இலை சின்னத்தையே எதிா்த்து நிற்கப் போகிறேனா எனக் கேட்கிறீா்கள். இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காகவே போட்டியிடுகிறோம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com