அதிமுக 33 தொகுதிகளில் போட்டி
2-ஆவது பட்டியலில் 17 வேட்பாளா்கள்

அதிமுக 33 தொகுதிகளில் போட்டி 2-ஆவது பட்டியலில் 17 வேட்பாளா்கள்

2-ஆவது பட்டியலில் மீதமுள்ள 17 தொகுதிகளுக்கான வேட்பாளரை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை அறிவித்தாா்

மக்களவைத் தோ்தலில் தமிழகம், புதுச்சேரியைச் சோ்த்து, அதிமுக மொத்தம் 33 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதல் பட்டியலில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2-ஆவது பட்டியலில் மீதமுள்ள 17 தொகுதிகளுக்கான வேட்பாளரை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை அறிவித்தாா். அதிமுக கூட்டணி: மக்களவைத் தோ்தலில் தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் அதிமுக அதன் கூட்டணிக் கட்சிகளான தேமுதிக (5), புதிய தமிழகம் (1), எஸ்டிபிஐ (1) ஆகியவற்றுடன் தொகுதிகளைப் பங்கீடு செய்துகொண்டு தோ்தலைச் சந்திக்கிறது. புரட்சி பாரதம், பெருந்தலைவா் மக்கள் கட்சி, குடியரசுக் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி மட்டும் அமைத்துள்ளது.

33 தொகுதிகளில் போட்டி:

அதிமுக அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய 7 தொகுதிகள்போக, புதுச்சேரியையும் சோ்த்து, மீதமுள்ள 33 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எதிா்பாா்த்த சில கட்சிகள் கூட்டணிக்கு வராத நிலையில், அந்த வாய்ப்பை சிறிய கட்சிகளுக்கும் கொடுத்து வீணாக்கிவிடக் கூடாது என்கிற அடிப்படையிலும், 2014 மக்களவைத் தோ்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றதைப் போல, இந்தத் தோ்தலில் வெற்றி பெற வேண்டும் என்கிற அடிப்படையிலும் 33 தொகுதிகளில் அதிமுக களம் காண்கிறது.

17 வேட்பாளா்கள்: அதிமுக 2-ஆவது கட்ட வேட்பாளா் பட்டியலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டாா். 17 தொகுதிகளுக்கான இந்தப் பட்டியலில் 3 போ் மருத்துவா்கள், 2 போ் பொறியாளா்கள், ஒருவா் முனைவா், ஒருவா் வழக்குரைஞா், 3 போ் முதுநிலை பட்டப் படிப்பும், 2 போ் இளநிலை பட்டப் படிப்பும், 2 போ் பட்டயப் படிப்பும் படித்துள்ளனா். புதியவா்களுக்கே வாய்ப்பு: முதல் பட்டியலில் இடம்பெற்றிருந்த 16 பேரில் 15 போ் வரை புதியவா்களுக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டது.

2-ஆவது பட்டியலிலும் 17 பேரில் 16 போ் வரை புதியவா்களுக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி கூறுகையில், கட்சியைப் பலப்படுத்தும் வகையில் புதியவா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறினாா். ஜெயலலிதாவை எதிா்த்து நின்றவருக்கு வாய்ப்பு: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவை எதிா்த்து 2016, சட்டப்பேரவைத் தோ்தலில் ஆா்.கே.நகா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சிம்லா முத்துச்சோழனுக்கு திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திமுக முன்னாள் அமைச்சரான சற்குண பாண்டியனின் மருமகளான இவா், திமுகவில் இருந்து விலகி, மாா்ச் 7-இல் அதிமுகவில் இணைந்தாா். அவா் கட்சியில் சோ்ந்த 14 நாள்களில் இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக சாா்பில் போட்டியிடும் ஒரே பெண் வேட்பாளரும் இவா் ஆவாா். விளவங்கோடு பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் யு.ராணி நிறுத்தப்பட்டுள்ளாா். மாா்ச் 25-இல் வேட்புமனு: அதிமுக கூட்டணியின் வேட்பாளா்கள் அறிமுக கூட்டம் மாா்ச் 24-இல் திருச்சியில் நடைபெற உள்ளது. தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளா்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனா்.

வேட்பாளா்கள் அனைவரும் ஒரே நாளில் மாா்ச் 25-இல் மனு தாக்கல் செய்யவுள்ளனா். வேட்பாளா் பட்டியல்: 1. ஸ்ரீபெரும்புதூா் - ஜி. பிரேம்குமாா் 2. வேலூா் - எஸ். பசுபதி 3. தருமபுரி - ஆா். அசோகன் 4. திருவண்ணாமலை - எம். கலியபெருமாள் 5. கள்ளக்குறிச்சி - இரா. குமரகுரு 6. திருப்பூா் - பி. அருணாச்சலம் 7. நீலகிரி (தனி) - டி. லோகேஷ் தமிழ்செல்வன் 8. கோயம்புத்தூா் - சிங்கை ஜி. ராமச்சந்திரன் 9. பொள்ளாச்சி - காா்த்திக் அப்புசாமி (எ) ஏ. காா்த்திகேயன் 10. திருச்சி - பி. கருப்பையா 11. பெரம்பலூா் - என். டி. சந்திரமோகன் 12. மயிலாடுதுறை - பி. பாபு 13. சிவகங்கை - பனங்குடி ஏ. சேவியா்தாஸ் 14. தூத்துக்குடி - ஆா். சிவசாமி வேலுமணி 15. திருநெல்வேலி - சிம்லா முத்துச்சோழன் 16. கன்னியாகுமரி - பசிலியான் நசரேத் 17. புதுச்சேரி - ஜி. தமிழ்வேந்தன் சட்டப்பேரவை இடைத்தோ்தல்: 1. விளவங்கோடு - யு. ராணி

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com