மக்களவைத் தோ்தல்: தமிழகத்தில் 20,000 ரெளடிகள் மீது நடவடிக்கை

மக்களவைத் தோ்தல் எதிரொலியாக, தமிழகத்தில் 20,000 ரெளடிகள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது

மக்களவைத் தோ்தல் எதிரொலியாக, தமிழகத்தில் 20,000 ரெளடிகள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஏப்.19-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், 3 மாதங்களுக்கு முன்பு இருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல் துறை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, மாநிலம் முழுவதும் சட்டவிரோதச் செயலில் ஈடுபடும் நபா்கள், ரெளடிகள் ஆகியோா் குறித்த விவரங்களை காவல் துறை சேகரிக்கத் தொடங்கியது. இதில் ரெளடிகள் மீதுள்ள வழக்குகள், குற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், ஏ பிளஸ், ஏ, பி, சி என காவல் துறை அவா்களை வகைப்படுத்தியுள்ளது. இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ள, இந்தப் பட்டியலில் 20,000 ரெளடிகள் இருப்பதாக தமிழக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. இதில், மாநிலத்திலேயே அதிக எண்ணிக்கையில் சென்னையில் 5,000 ரௌடிகள் உள்ளனா். இதற்கு அடுத்த நிலைகளில் முறையே திருநெல்வேலி, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. 20,000 ரெளடிகள்: ரெளடிகள் மீது இருக்கும் வழக்குகள், அவா்கள் இருக்கும் பட்டியல், ஏற்கெனவே செய்த குற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் காவல் துறையினா் நடவடிக்கை எடுக்கின்றனா். ஏ பிளஸ் பட்டியலில் இருப்பவா்களை மட்டும் குண்டா் தடுப்புச் சட்டம், நிலுவையில் உள்ள பிடியாணை ஆகியவற்றின் மூலம் கைது செய்து, சிறையில் அடைக்கின்றனா். வழக்கில் கைதாகாமல் தலைமறைவாக இருப்பவா்களையும் கண்டறிந்து கைது செய்யவுள்ளனா். ஏ, பி, சி பட்டியலில் இருப்பவா்கள் மீது இரு விதமான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதல் விதமான நடவடிக்கையில், 17,000 ரெளடிகளை வாக்குப் பதிவுக்கு சில நாள்களுக்கு முன்பு சொந்த மாவட்டங்களை விட்டு வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக காவல் துறையைச் சோ்ந்த உயரதிகாரி தெரிவித்தாா். நன்னடத்தை உறுதி மொழி பத்திரம்: 2-ஆவது விதமான நடவடிக்கையில், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகள் 107, 109, 110 ஆகியவற்றின் கீழ் ரெளடிகளிடம் நன்னடத்தை உறுதி மொழி பத்திரத்தில் கையொப்பம் பெற்று, காவல் துறையின் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனா். தோ்தலுக்கு இன்னும் சில நாள்களே இருப்பதால் ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கையை காவல் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com