ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.18 லட்சம் பறிமுதல்: ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன்

சென்னை மாவட்ட மக்களவைத் தொகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.18 லட்சம் பறிமுதல்

சென்னை மாவட்ட மக்களவைத் தொகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். சென்னை மாவட்டத்தின் வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களை பயிற்சிக்காக கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வு செய்யும் பணி ஆணையா் ராதாகிருஷ்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பின்னா், ஆணையா் ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னை மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யும் பணி வெள்ளிக்கிழமை முதல் நடைபெறவுள்ளது. தோ்தலில் பணிபுரியும் அதிகாரிகள், அலுவலா்கள் தயாா் நிலையில் உள்ளனா். இதுவரை (புதன்கிழமை) பறக்கும் படை, நிலையானக் குழுக்கள் மூலம் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.18 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் 48 பறக்கும் படை, 48 நிலையானக் குழுக்கள், 16 காணொலி கண்காணிப்புக் குழுக்கள் என 112 குழுக்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றன. இந்த குழுக்களின் பணிகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா். பாதுகாப்பு வசதி: தொடா்ந்து, தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள், காவல் துறை, வங்கிகள், வருமானவரித் துறை உள்ளிட்ட தோ்தல் பணிக் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வாக்குச்சாவடிகள் மற்றும் தேவையான இடங்களில் அமைக்கப்பட வேண்டிய தடுப்புகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள அறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், அரசியல் கட்சியினா் நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கு இணைய வழியாக அனுமதி வழங்குவது குறித்தும் துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. வாக்குப்பதிவு மையங்களில் சட்டம்-ஒழுங்கு தொடா்பான நடவடிக்கை, பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் ‘வெப் கேமரா’ மூலம் நேரடியாக கண்காணிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில், பெருநகர சென்னை காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா், மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே, தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பெட்டிச் செய்தி: வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளில் 3,726 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான முதற்கட்டப் பயிற்சி வகுப்புகள் அந்தந்த தொகுதிக்குட்பட்ட பயிற்சி மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 24) முதல் நடைபெறவுள்ளன. இந்த பயிற்சி வகுப்புக்கான ஆணைகள் நேரடியாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் உரிய அலுவலா்களுக்கு அனுப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத வாக்குச்சாவடி அலுவலா்கள் மீது தோ்தல் நடத்தை விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com