விசாகப்பட்டினம்: கப்பலில் போதைப் பொருள் பறிமுதல்: சிபிஐ நடவடிக்கை

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கப்பல் ஒன்றில் இருந்து அதிக அளவில் ‘கோகைன்’ போதைப் பொருளை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா். இன்டா்போல் அமைப்பிடம் இருந்து கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். சுங்கத் துறை அதிகாரிகளுடன் இணைந்து கப்பலில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், உலா்த்தப்பட்ட ஈஸ்ட் அடங்கிய பைகளில் கலந்து வைக்கப்பட்டிருந்த கோகைன் போதைப் பொருள் கண்டறியப்பட்டது. இந்த சரக்கின் மொத்த எடை 25,000 கிலோ ஆகும். இதில் போதைப் பொருளின் எடையை உறுதி செய்யும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். நாட்டில் விசாரணை முகமைகளால் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்படுவது அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. குஜராத் கடல் பகுதியில் கடந்த பிப்ரவரியில் கடற்படை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் மாநில காவல்துறையினா் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் படகு ஒன்றில் இருந்து ரூ.2,000 கோடி மதிப்பிலான 3,300 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக வெளிநாட்டினா் 5 போ் கைது செய்யப்பட்டனா். இந்திய கடல் பகுதியில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக இந்தப் போதைப் பொருள் சிக்கியது. முன்னதாக, கேரள கடல் பகுதியில் கடந்த 2023, மே மாதம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவும் கடற்படையும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் 2,500 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com