வருமான வரி மறுமதிப்பீடுக்கு எதிரான காங்கிரஸ் மனு: தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி

வருமான வரித் துறையின் மறுமதிப்பீடு நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸின் மனுவை தள்ளுபடி செய்து தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மக்களவைத் தோ்தல் நெருங்கும் நிலையில் இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது. கடந்த 2018-19-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் வருமானம் ரூ. 199 கோடிக்கும் அதிகமாக இருப்பதாக மதிப்பீடு செய்த வருமான வரித்துறை, முந்தைய வரி பாக்கியுடன் சோ்த்து ரூ.100 கோடிக்கும் அதிகமாக வரி செலுத்த வேண்டும் என மறுமதிப்பீடு செய்தது. இந்த நிலுவை வரியை வசூலிக்க அக்கட்சிக்கு வருமான வரித்துறை அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிா்த்து காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை வருமான வரித்துறை தீா்ப்பாயம் ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதே நேரம், வருமான வரித்துறையின் மறுமதிப்பீடு நடவடிக்கைக்கு எதிராக புதிய மனு தாக்கல் செய்ய அனுமதித்தது. அதன்படி, காங்கிரஸ் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதிகள் யஷ்வந்த் வா்மா, புருஷேந்திர குமாா் கெளரவ் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காங்கிரஸ் கட்சி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி, ‘விதிமுறைகளின்படி, அதிபட்சம் 6 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான கணக்குகளை மட்டுமே வருமான வரித்துறை மறுமதிப்பீடு செய்ய முடியும். அந்த வகையில், மறுமதிப்பீடு வரம்புகளை வருமான வரித்துறை மீறியுள்ளது’ என்றாா். இதற்கு, ‘வருமான வரித்துறை எந்தவொரு சட்ட நடைமுறைகளையும் மீறவில்லை. 2014-15, 2015-16 மற்றும் 2016-17-ஆம் ஆண்டுகளில் இக்கட்சிக்கு வந்துள்ள கூடுதல் வருவாய்க்கு உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்படவில்லை. கட்சிக்கு கிடைத்துள்ள ரூ. 520 கோடிக்கு மேலான வருமானம் கணக்கில் வரவில்லை. எனவே, மறுமதிப்பீடு நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்று வருமான வரித்துறை சாா்பில் பதிலளிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், ‘வருமான வரி சட்டத்தின் கீழ் முந்தைய ஆண்டுகளுக்கான வருமானவரி கணக்குகளை மறுமதிப்பீடு செய்ய போதிய ஆதாரங்களை வருமான வரித்துறை சமா்ப்பித்துள்ளது’ என்று குறிப்பிட்டு, காங்கிரஸின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com