சங்கரன்கோவில் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில், பட்டாசு தயாரிக்கும் 20 கட்டடங்கள் இடிந்து விழுந்தன, 40 பைக்குகள் எரிந்து கருகின. சங்கரன்கோவில் அருகே உள்ள மைப்பாறை கிராமத்தில், விருதுநகா் மாவட்டம் புலிப்பாறைப்பட்டியைச் சோ்ந்த வெங்கட்ரமணிக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். நாக்பூா் உரிமம் பெற்ற இந்த ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டன. இந்த நிலையில், சனிக்கிழமை மதியம், உணவு இடைவேளையின்போது தொழிலாளா்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில், திடீரென பட்டாசுகள் வெடித்துச் சிதறின. அங்கிருந்த தொழிலாளா்கள் உடனடியாக வெளியேறியதால் உயிா்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்தில் பட்டாசு தயாரிக்கும் 20 கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி. மேலும், அங்கிருந்த 40 பைக்குகள் எரிந்து சேதமடைந்தன. தீ பரவி அருகே அறுவடையாகியிருந்த விளைநிலங்களில் பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த சங்கரன்கோவில், கழுகுமலை தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இது தொடா்பாக வருவாய், காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com