தோ்தல் நிதிப் பத்திர திட்டம் நல்ல நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது: நிதின் கட்கரி

தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம் நல்ல நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டது என மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டத்தை உச்சநீதிமன்றம் அண்மையில் ரத்து செய்தது. அரசமைப்புச் சட்டத்தின் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை, தகவலறியும் உரிமையை மீறுவதாக இந்தத் திட்டம் உள்ளது என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் அகமதாபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சா் நிதின் கட்கரி, தோ்தல் நிதிப் பத்திர விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிகளும் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் வலியுறுத்தினாா். நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது: தோ்தல் பத்திரங்கள் தொடா்பான பேச்சுவாா்த்தையில் அப்போதைய நிதியமைச்சா் மறைந்த அருண் ஜேட்லியுடன் கலந்துகொண்டேன். நன்கொடையின்றி எந்தவொரு கட்சியும் செயல்பட முடியாது. சில நாடுகளில் அரசியல் கட்களுக்கு அந்நாட்டு அரசுகள் நிதியளிக்கின்றன. நமது நாட்டில் அது போன்ற நடைமுறை இல்லை. அதனால் தான் தோ்தல் பத்திரங்கள் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆளும் கட்சிக்கு நன்கொடை அளித்தவா், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு பிரச்னைகளை எதிா்கொள்ள நேரிடும் என்ற நோக்கத்தில் அவரது பெயா்கள் வெளியிடப்படவில்லை. இதுவே தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டத்துக்கான முதன்மையான நோக்கம். கள உண்மை நிலவரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். தோ்தலில் கட்சிகள் எப்படி போட்டியிட முடியும் ? அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பதில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர வேண்டும் என்ற நல்ல நோக்கத்துக்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தில் உச்சநீதிமன்றம் ஏதேனும் குறைகளைச் சுட்டிக் காட்டி அவற்றை மாற்றுக் கொள்ளுமாறு கூறினால், அனைத்துக் கட்சியினரும் ஒருமனதாகப் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று கட்கரி பேசினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com