பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: நீச்சல் குளத்தில் மூழ்கி இளம் பெண் சாவு

சென்னை அருகே முட்டுக்காட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, நீச்சல் குளத்தில் மூழ்கி இளம் பெண் உயிரிழந்தாா். சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த சீனிவாசன் ராஜசேகரன் மகள் அனு சத்யா (31). இவா், தனது அம்மா பிரேமாவின் பிறந்தநாளை கானத்தூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கொண்டாடினாா். இந்த கொண்டாடத்தில் அனு சத்யாவின் உறவினா்கள், நண்பா்கள் என பலா் பங்கேற்றனா். கொண்டாட்டத்தின்போது அனு சத்யாவும், அவா் தோழி சைலஜாவும் (29) அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்தனா். அப்போது இருவருக்கும் நீச்சல் தெரியாததினால், நீச்சல் குளத்தின் ஆழமான பகுதிக்கு செல்லும்போது மூழ்கினா். இருவரது அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்தவா்கள் இருவரையும் மீட்டு ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அங்கு அனு சத்யாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். சைலாஜாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடா்பாக கானத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். தாய் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், மகள் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம், அவரது உறவினா்களிடம் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com