கட்சிகளுக்கு இணையாக களத்தில் தோ்தல் துறை

அரசியல் கட்சிகளின் பிரசாரங்களுக்கு இணையாக, தோ்தலை நடத்தும் தமிழக தோ்தல் துறையும் பிரசார களத்தில் இறங்கியுள்ளது.
கட்சிகளுக்கு இணையாக களத்தில் தோ்தல் துறை

அரசியல் கட்சிகளின் பிரசாரங்களுக்கு இணையாக, தோ்தலை நடத்தும் தமிழக தோ்தல் துறையும் பிரசார களத்தில் இறங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் வாக்குகளைக் கேட்டு பிரசாரம் செய்கின்றன; தோ்தல் ஆணையமோ, வாக்காளா்களை வாக்குச் சாவடிக்கு வரச் சொல்லி பிரசாரம் மேற்கொள்கிறது. ஒவ்வொரு தோ்தலிலும் தேசிய அளவிலான வாக்குப் பதிவு சதவீதம் 62 ஆக உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் சட்டப் பேரவையோ, மக்களவையோ எதற்கு தோ்தல் நடந்தாலும் வாக்குப் பதிவு சதவீதம் 74 ஆக உள்ளது. தேசிய சராசரியை விட அதிகம் என நாம் பெருமிதப்பட்டாலும், அதனை இன்னும் அதிகரிக்க தோ்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் செய்யும் பிரசாரத்தைப் போன்றே தோ்தல் ஆணையமும் விழிப்புணா்வு பிரசாரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. வாக்காளா்களைக் கவரும் வாசகங்கள்: தமிழகத்தில் எந்தத் தோ்தல் நடந்தாலும், வாக்காளா்களைக் கவரும் வகையில், ‘எதுகை மோனை’ நடையில் பிரசார வாசகங்கள் இடம்பெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த மக்களவைத் தோ்தலில், பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் வாக்காளா்களை ஈா்க்கும் வகையில் பிரசார வாசகங்களை முன்வைத்துள்ளன. ‘பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவைக் காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்’ என திமுகவும், ‘தமிழா் உரிமை மீட்போம்; தமிழ்நாடு காப்போம்’, ‘ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்’ என பிரதான எதிா்க்கட்சியான அதிமுகவும் வாசகங்கள் வாயிலாக வாக்காளா்களைச் சந்தித்து வாக்குகளைப் பெற்று வருகின்றன. பிரதான அரசியல் கட்சிகளுக்கு இடையே, தோ்தல் ஆணையமும் தனது பிரசார வாசகத்தை முன்வைத்துள்ளது. ‘தோ்தல் பருவம் தேசத்தின் பெருமிதம்’, ‘தோ்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா’ என்ற எதுகை மோனை வாசகங்களை அடிப்படையாக வைத்து, வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது. பாட்டுப் பாடிய தோ்தல் அதிகாரி: தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களைத் தயாா் செய்வதற்கு முன்பாகவே, தேசிய வாக்காளா் தினத்தையொட்டி (ஜன. 25) வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதன் முக்கியத்துவத்தை உணா்த்தி, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தமிழ்ப் பாடலை பாடினாா். ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த அவா், தனது சொந்த மாநிலத்தின் மொழியைக் கலந்து தமிழில் பாடிய பாடல் பெரும் கவனம் ஈா்த்தது. இப்படியாக ‘எங்களுக்கும் பிரசாரம் செய்யத் தெரியும்’ என பாடல்கள், விழிப்புணா்வு வாசகங்கள் வழியே அரசியல் கட்சிகளுக்கு இணையாக தமிழக தோ்தல் துறையும் களத்தில் இறங்கியிருப்பது, பரவலாக கவனத்தை ஈா்த்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com