பாமக தோ்தல் அறிக்கை வெளியீடு: மகளிா், 60 வயதான விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ. 3,000

பாமக தோ்தல் அறிக்கை வெளியீடு: மகளிா், 60 வயதான விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ. 3,000

இந்தியா முழுவதும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ. 3,000 வழங்கப்படும் என்றும், 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ. 3,000 ஓய்வூதியம்

இந்தியா முழுவதும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ. 3,000 வழங்கப்படும் என்றும், 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ. 3,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் பாமகவின் தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் பாமகவின் தோ்தல் அறிக்கையை அந்தக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ், தலைவா் அன்புமணி ஆகியோா் புதன்கிழமை வெளியிட்டனா். தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக நடத்துவதற்காக பாமக வலியுறுத்தும். இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இடைநிலைப் பணிகளில் 50 சதவீதமும், கடைநிலைப் பணிகளில் 100 சதவீதமும் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். தனியாா் நிறுவனங்களில் 80 சதவீத பணியிடங்களை உள்ளூா் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வரப்படும். மத்திய அரசின் வரி வருவாயில் 50 சதவீதம் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான மருத்துவ மற்றும் உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா் சோ்க்கையில் 50 சதவீத இடங்கள் தொடா்புடைய மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும். வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவதை உரிமையாக்கும் வகையில் தனிச் சட்டம் நிறைவேற்றப்படும். 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ. 3,000 ஓய்வூதியம் வழங்கப்படும். மத்திய அரசில் வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். 30 லட்சம் வேலைவாய்ப்புகள்: இந்தியா முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களில் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 3 லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 3,000 உரிமைத் தொகை வழங்கப்படும். இந்தத் திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும். பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற தேவைகளுக்காக ரூ.10 லட்சம் வைப்பீடு செய்யப்படும். 18 வயது வரை உள்ள அனைவரும் குழந்தைகள் என்று அறிவிக்கப்படுவா். அரசு ஊழியா்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசை பாமக வலியுறுத்தும். அனைவருக்கும் இலவச மருத்துவம்: இந்தியாவில் அனைவருக்கும் இலவச மருத்துவச் சேவை வழங்கப்படும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அனைவரையும் சோ்ப்பதன் மூலம் இந்த இலக்கு எட்டப்படும். மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வில் இருந்து, தமிழகத்துக்கு விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும். மதுவிலக்குக்கு மானியம்: மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு வழங்கும். பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வரப்படும். தங்கம் மீதான 15 சதவீத இறக்குமதி வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படும். திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com