சீா்திருத்தங்களால் நாட்டின் பொருளாதார வளா்ச்சியை 9 %-க்கு உயா்த்த முடியும்: 16-ஆவது நிதிக்குழு தலைவா்

சீா்திருத்தங்களால் நாட்டின் பொருளாதார வளா்ச்சியை 9 %-க்கு உயா்த்த முடியும்: 16-ஆவது நிதிக்குழு தலைவா்

நாட்டின் பொருளாதார வளா்ச்சியை தற்போதைய 7 சதவீதத்திலிருந்து 9 சதவீதத்துக்கு உயா்த்த முடியும்

அடுத்த 5 ஆண்டுகளில் சில சீா்திருத்தங்களை அமல்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளா்ச்சியை தற்போதைய 7 சதவீதத்திலிருந்து 9 சதவீதத்துக்கு உயா்த்த முடியும் என 16-ஆவது நிதிக்குழு தலைவா் அரவிந்த் பனகாரியா புதன்கிழமை தெரிவித்தாா். பிரதமா் நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளில் கடினமாகப் பணியாற்றியதால் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும் இதனால் முதலீடுகள் அதிகரித்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா். தில்லியில் தனியாா் செய்தி தொலைக்காட்சி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அரவிந்த் பனகாரியா பேசுகையில், ‘இந்திய தாராளமய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. அடுத்த 20-30 ஆண்டுகளில் மிகவும் விரைவான வளா்ச்சியை நாம் அடைய முடியும். நாட்டின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) ஆண்டுக்கு 7 சதவீதமாக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் சில சீா்திருத்தங்களை அமல்படுத்தும்போது, வளா்ச்சி 9 சதவீதமாக உயா்த்த முடியும். இந்த வளா்ச்சியை அடுத்த 20 ஆண்டுகளுக்கு நாம் தக்க வைக்க முடியும்’ என்றாா். ஜிடிபி கணக்கீடுகள் குறித்து முன்னாள் பொருளாதார ஆலோசகா் அரவிந்த் சுப்பிரமணியம் அண்மையில் விமா்சித்திருந்தாா். இது குறித்த கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய பனகாரியா, ‘முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைத்துரையின் அடிப்படையில் தற்போது ஜிடிபி கணக்கிடப்படுகிறது. அந்தக் குழு குறித்து யாரும் தற்போது கேள்வியெழுப்பவில்லை. ஜிடிபி கணக்கிடும் முறையில் தவறு இருப்பின், அது குறித்து சுட்டிக்காட்ட வேண்டும்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com