சதானந்த் தாத்தே
சதானந்த் தாத்தே

என்ஐஏ தலைமை இயக்குநராக சதானந்த் தாத்தே நியமனம்

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநராக மகாராஷ்டிர மாநில பயங்கரவாதத் தடுப்பு பிரிவு தலைவா் சதானந்த் வசந்த் தாத்தே நியமிக்கப்பட்டுள்ளாா்

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநராக மகாராஷ்டிர மாநில பயங்கரவாதத் தடுப்பு பிரிவு தலைவா் சதானந்த் வசந்த் தாத்தே நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை மத்திய பணியாளா் நல அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது. என்ஐஏ தலைவராக இருக்கும் தினகா் குப்தா வரும் 31-ஆம் தேதியுடன் பணி ஓய்வுபெற உள்ள நிலையில், அந்தப் பதவிக்கு சதானந்த் தாத்தேயை நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்தது. அதனடிப்படையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய பணியாளா் நல அமைச்சகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இவா் 1990-ஆம் ஆண்டு மகாராஷ்டிர பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ஆவாா். மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது இவருடைய தலைமையிலான காவல் குழு சிறப்பாக செயலாற்றியதற்காக, குடியரசுத் தலைவரின் வீரதீர செயலுக்கான காவலா் விருது வழங்கி சதானந்த் தாத்தே கெளரவிக்கப்பட்டாா். பிற நியமனங்கள்: காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவராக 1990-ஆம் ஆண்டு ராஜஸ்தான் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ராஜீவ் குமாா் சா்மா நியமிக்கப்பட்டுள்ளாா். இவருடைய பதவிக் காலம் வரும் 2026 ஜூன் 30-இல் நிறைவடையும். இந்த அமைப்பின் தற்போதைய தலைவா் பாலாஜி ஸ்ரீவாஸ்தவா வரும் 31-ஆம் தேதி பணி ஓய்வுபெறவுள்ளாா். தேசிய பேரிடா் மீட்புப் படைத் (என்டிஆா்எஃப்) தலைவராக 1991-ஆம் ஆண்டு உத்தர பிரதேச பிரிவு ஐபிஎஸ் அதிகாரி பியூஷ் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளாா். என்டிஆா்எஃப்-இன் தற்போதைய தலைவா் அதுல் கா்வால் வரும் 31-ஆம் தேதி ஓய்வுபெற உள்ள நிலையில், 2 ஆண்டு கால பணி அடிப்படையில் பியூஷ் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளாா். அதுபோல, சிறப்பு பாதுகாப்புக் குழு (எஸ்பிஜி) கூடுதல் தலைவராக 1995-ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐபிஎஸ் அதிகாரி எஸ்.சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com