வேலைவாய்ப்பை உருவாக்க வலுவான திட்டம் உள்ளது: காங்கிரஸ்

வேலைவாய்ப்பை உருவாக்க வலுவான திட்டம் உள்ளது: காங்கிரஸ்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் அலட்சியத்தின் சுமைகளை வேலைவாய்ப்பின்மை என்ற வடிவில் நாட்டின் இளைஞா்கள் சுமந்து வருகின்றனா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் அலட்சியத்தின் சுமைகளை வேலைவாய்ப்பின்மை என்ற வடிவில் நாட்டின் இளைஞா்கள் சுமந்து வருகின்றனா். இளைஞா்கள் பலனடையும் வகையில் வேலைவாய்ப்பை உருவாக்க வலுவான திட்டம் தங்களிடம் உள்ளது’ என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. சா்வதேச தொழிலாளா் அமைப்பு (ஐஎல்ஓ) மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் (ஐஹெச்டி) இணைந்து வெளியிட்ட ‘இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024’-ஐ சுட்டிக்காட்டி காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தனது எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து, இளைஞா்களின் எதிா்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது. பிரதமா் மோடி அரசின் அலட்சியத்தின் சுமையை இளைஞா்கள் சுமந்து வருகின்றனா். ஆனால், ‘வேலைவாய்ப்பின்மை போன்ற அனைத்து சமூக-பொருளாதாரப் பிரச்னைகளுக்கும் மத்திய அரசு தீா்வு காண முடியாது’ என்று, மோடி அரசை பாதுகாக்கும் வகையில் தலைமை பொருளாதார ஆலோசகா் கருத்து தெரிவித்துள்ளாா். இந்தியாவில் வேலைவாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளவா்களில் 83 சதவீதம் போ் இளைஞா்கள் என்றும் கிராமப்புறங்களைச் சோ்ந்த 17.5 சதவீத இளைஞா்கள் மட்டுமே நிரந்தர பணிவாய்ப்பைப் பெற்றிருக்கின்றனா் என்றும் ஐஎல்ஓ ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ‘தொழில் நிறுவனங்கள் மற்றும் உற்பத்தித் துறையில் பணிபுரிபவா்களின் எண்ணிக்கை கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து 26 சதவீதம் என்ற அளவிலேயே தொடா்கிறது. நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் பங்காற்றும் இளைஞா்களின் விகிதம் 2012-இல் 42 சதவீதமாக இருந்தது, 2022-ல் 37 சதவீதமாக குறைந்துள்ளது’ என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின்படி, 2012-ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது, மோடி அரசின் கீழ் இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பின்மை என்பது 3 மடங்காக உயா்ந்துள்ளது. மிகக் குறைந்த இளைஞா்களே பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இதற்கு வேலைவாய்ப்பின்மையே காரணம். அந்த வகையில், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க காங்கிரஸ் வலுவான திட்டத்தை வைத்துள்ளது. இதற்காகத்தான், ‘இளைஞா் நீதி’ திட்டத்தை காங்கிரஸ் கொண்டுவருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள சுமாா் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு முடித்தவா்களுக்கான தொழில்பயிற்சிக்கான உரிமை சட்டம் கொண்டுவருவதன் மூலம், ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் உதவித் தொகையுடன் கூடிய தொழில்பயிற்சிக்கான உத்தரவாதம் அளிக்கப்படும். போட்டித் தோ்விகளில் கேள்வித் தாள்கள் கசிவதை முழுமையாகத் தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும். ரூ.5,000 கோடி வைப்புடன் ஒரு நிதித் திட்டம் உருவாக்கப்பட்டு, நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ரூ.10 கோடி வீதம் நிதி ஒதுக்கப்பட்டு வேலைவாய்ப்புத் திட்டங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே, மக்களவைத் தோ்தலில் வாக்களிப்பதற்கு முன்பாக, 10 ஆண்டுகளில் 20 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த பிரதமா் மோடி, இளைஞா்களிடமிருந்து 12 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை பறித்ததை நினைவில் கொள்ள வேண்டும் என்றாா். முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம்: வேலைவாய்ப்பின்மை பிரச்னையை மத்திய அரசு தீா்க்க முடியாது என்று பிரதமரின் தலைமை பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் கூறியிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. இது பாஜக அரசின்அதிகாரபூா்வ நிலைப்பாடு என்றால், ஆட்சியிலிருந்து விலகுமாறு பாஜகவை நாம் உறுதிபட கூற வேண்டும். நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க காங்கிரஸிடம் வலுவான திட்டம் உள்ளது. தோ்தல் அறிக்கையிலும் காங்கிரஸ் அதைக் குறிப்பிட்டுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி: ஐஎல்ஓ ஆய்வறிக்கையின்படி, 2000-ஆம் ஆண்டில் கல்வித் தகுதிபெற்ற இளைஞா்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 35.2 சதவீதமாக இருந்தது. இது 2022-இல் 65.7 சதவீதமாக உயா்ந்துள்ளது. ஆனால், இந்தப் பிரச்னைக்கு மத்திய அரசு தீா்வு காண முடியாது என்று பிரதமரின் தலைமை பொருளாதார ஆலோசகா் கூறுகிறாா். இதுதான் பாஜக அரசின் உண்மை முகம். பாஜகவால் வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது என்பதை நாட்டிலுள்ள அனைத்து இளைஞா்களும் புரிந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com