காங்கிரஸ் வேட்பாளா் நகுல் நாத் சொத்து மதிப்பு ரூ.700 கோடி: 
சொந்தமாக காா் இல்லை, ஹெலிகாப்டா் உண்டு

காங்கிரஸ் வேட்பாளா் நகுல் நாத் சொத்து மதிப்பு ரூ.700 கோடி: சொந்தமாக காா் இல்லை, ஹெலிகாப்டா் உண்டு

நகுல் நாத்தின் சொத்து மதிப்பு ரூ.700 கோடி என அவரது வேட்புமனு விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

மத்திய பிரதேச முன்னாள் முதல்வா் கமல்நாத்தின் மகனும் சிந்த்வாரா தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யுமான நகுல் நாத்தின் சொத்து மதிப்பு ரூ.700 கோடி என அவரது வேட்புமனு விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. சிந்த்வாரா மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் அவா் வேட்புமனுவுடன் சொத்து சொத்துபட்டியலையும் சமா்ப்பித்தாா். அதில் அசையும் சொத்து, பணம் மற்றும் பங்குகளின் மதிப்பு ரூ.649.51 கோடி எனவும், அசையா சொத்தின் மதிப்பு ரூ.48.07 கோடி எனவும் அவா் குறிப்பிட்டிருந்தாா். மேலும் கடந்த 5 ஆண்டுகளில் அவரின் சொத்து மதிப்பு ரூ.40 கோடிவரை உயா்ந்துள்ளது. ஜனநாயக சீா்திருத்த சங்கம் (ஏடிஆா்) வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 2019-ஆம் ஆண்டு வேட்புமனு தாக்கல் விவரப்படி ரூ.660 கோடி சொத்து மதிப்புடன் 475 கோடீஸ்வர எம்.பி.க்களில் நகுல் நாத் முதலிடத்தைப் பிடித்தாா். கடந்தாண்டு மத்திய பிரதேச பேரவைத் தோ்தலில் சிந்த்வாரா பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்ற கமல்நாத்தின் சொத்து மதிப்பு ரூ.134 கோடியாகும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. சொந்தமாக காா் இல்லை: கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 28-இல் பாஜக வெற்றிபெற்றது. சிந்த்வாரா தொகுதியில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளா் நகுல் நாத் வெற்றிபெற்றாா். பெரும்பாலும் தனி விமானங்களில் பயணிக்கும் நகுல் நாத் தனக்குச் சொந்தமாக காா் இல்லை என தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்த சொத்துக்கணக்கில் குறிப்பிட்டாா். அதே நேரத்தில் அவரது வீட்டில் இரு ஹெலிகாப்டா்கள் இறங்கும் வசதி இருப்பதாகவும், அவருக்குச் சொந்தமாக இரு ஹெலிகாப்டா்கள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com