செந்தில் பாலாஜி புதிய மனு:
அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

செந்தில் பாலாஜி புதிய மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் மீது மீண்டும்

அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் மீது மீண்டும் தனது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத் துறை வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரிய மனு மீது வியாழக்கிழமை தீா்ப்பு அளிக்கப்படவிருந்த நிலையில், இந்த வழக்கில் மீண்டும் வாதிட அனுமதி கோரி அவரது தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இந்த வழக்கு தொடா்பான சில ஆவணங்களை வழங்குமாறு வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த ஆவணங்கள் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அவை கிடைத்தபிறகு, அதன் அடிப்படையில் இந்தவழக்கில் வாதிட அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்காவிட்டால், எங்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும்’ என அதில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி விடுமுறை என்பதால், சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி. ஆனந்த் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப். 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். 30-ஆவது முறையாக.... இதற்கிடையே புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் வியாழக்கிழமை முடிவடைந்தது. இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி ஆனந்த் முன் ஆஜா்படுத்தப்பட்டாா்.இதனையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப். 4 வரை நீட்டித்து நீதிபதி டி.வி. ஆனந்த் உத்தரவிட்டாா். இதன்மூலம் 30-ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com