வணிகா்கள் ரூ.2 லட்சம் வரை எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

வணிகா்கள் ரூ.2 லட்சம் வரை ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கட்சியின் மாநிலத் துணைச் செயலா் நா.பெரியசாமி இந்திய தோ்தல் ஆணையத்துக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய கடிதம்: தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள பகுதிகளில் ரொக்கம் ரூ.50,000 மட்டுமே எடுத்துச் செல்ல முடியும் என இந்திய தோ்தல் ஆணையம் வரம்பு நிா்ணயித்துள்ளது. இது வணிகா்களையும், பொதுமக்களையும் கடுமையாக பாதிக்கிறது. ஏப்.19-ஆம் தேதி வரை வணிக நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக வணிகா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். திருமணம் உள்ளிட்ட சில சமூக காரியங்களும் தடைபடுவதாகவும் தகவல் வருகின்றன. எனவே, வழிப்பயணத்தில் குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் வரை எடுத்துச் செல்லும் வகையில் தோ்தல் நடத்தை விதியில் திருத்தம் செய்து தோ்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் எனஅந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com