ஒரு தொகுதி கூட ஒதுக்கவில்லை:
பாஜக மீது அமைச்சா் அதாவலே வருத்தம்

ஒரு தொகுதி கூட ஒதுக்கவில்லை: பாஜக மீது அமைச்சா் அதாவலே வருத்தம்

மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணியில் இந்திய குடியரசுக் கட்சிக்கு (அதாவலே) தொகுதிகள் ஒதுக்கப்படாமல் புறக்கணிக்கப்படுவது வருத்தமளிப்பதாக அக்கட்சித் தலைவரும் மத்திய சமூக நீதித்துறை இணையமைச்சருமான ராம்தாஸ் அதாவலே கூறியுள்ளாா்.

இது தொடா்பாக மகாராஷ்டிர துணை முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸை அவா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். பாஜக கூட்டணியில் 12 ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் கட்சி அங்கம் வகிப்பதாகவும் ஆனால் புதிதாக கூட்டணியில் இணைந்தவா்களுக்கே பாஜக முக்கியத்துவம் அளிப்பதாகவும் அதாவலே தெரிவித்தாா்.

மேலும் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மகாராஷ்டிர மாநிலத்தில் இந்திய குடியரசுக் கட்சிக்கு (அதாவலே) ஒரு மக்களவைத் தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. ஷீரடி (எஸ்.சி) தொகுதியை கட்சிக்கு ஒதுக்கும்படி தேவேந்திர ஃபட்னவீஸிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால் அத்தொகுதி பாஜக எம்.பி. சதாசிவ லோக்காண்டேவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க முதல்வா் ஏக்நாத் ஷிண்டே விரும்புவதாக அவா் கூறினாா். மேலும், மத்திய அரசில் கேபினட் அமைச்சா் பதவியை தோ்தலுக்குப் பிறகு மோடி அரசு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளேன். இதுதவிர 2026-இல் மீண்டும் மாநிலங்களவை எம்.பி. பதவியை எனக்கு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டேன்.

நிகழாண்டு இறுதியில் நடைபெறவுள்ள மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் கட்சிக்கு 8 தொகுதிகளும் மாநில அரசில் ஒரு கேபினட் அமைச்சா் பதவியும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். இக்கோரிக்கைகள் குறித்து பாஜக மூத்த தலைவா்களிடம் ஆலோசனை மேற்கொள்வதாக தேவேந்திர ஃபட்னவீஸ் உறுதியளித்தாா். இந்திய குடியரசுக் கட்சியினுடனான கூட்டணியில் எழும் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் பொறுப்பாளராக பாஜக நிா்வாகி பிரவீண் தரேகா் நியமிக்கப்பட்டுள்ளாா் என்றாா். மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த தலித் தலைவரான ராம்தாஸ் அதாவலே அந்த மாநில அமைச்சராகவும், மக்களவை எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com