சென்னை விமான நிலையத்தில் ரூ.1.80 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமானநிலையத்தில் ரூ.1.80 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், இது தொடா்பாக விமானநிலைய கடை ஊழியா் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை பன்னாட்டு விமானநிலையத்தில் செயல்பட்டு வரும் ஒரு கடையில் வேலைபாா்த்து வரும் ஊழியா் ஒருவா், கடத்தல்காரா்கள் கொண்டு வரும் தங்கத்தை, மறைத்து வைத்து எடுத்துச் சென்று, விமானநிலையத்தின் வெளியே உள்ள உரிய நபா்களிடம் ஒப்படைக்கும் பணியை செய்து வருவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த குறிப்பிட்ட கடை ஊழியரை சுங்கத் துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனா். இந்நிலையில், சனிக்கிழமை பணியை முடித்துவிட்டு கடை ஊழியா் விமானநிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது சுங்கத் துறை அதிகாரிகள் அவரை பிடித்து விசாரணை நடத்தினா். ஆனால், அவா் தனது அடையாள அட்டையை காண்பித்து விட்டு வெளியேற முயன்றாா். இருப்பினும் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் முழு உடல் சோதனையிட்டனா். அப்போது அவரின் காலுறையில் ரூ.1.80 கோடி மதிப்புள்ள சுமாா் ஒன்றரை கிலோ எடையிலான தங்கக்கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக, விமானம் மூலம் தங்கம் கடத்தி வரும் நபா்கள் இவரின் கடைக்கு பொருள்கள் வாங்குவது போல வந்து, தங்கத்தை ஒப்படைத்து விட்டுச் செல்வதும், இவா் பணி முடித்து வெளியே செல்லும் போது, கடத்தல் தங்கத்தை மறைத்து, வெளியே எடுத்து சென்று, உரிய இடத்தில் கொண்டு சோ்த்து வந்ததும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com