சொத்துவரி செலுத்த இன்று கடைசிநாள்: தொழில் உரிமம் புதுப்பிக்க நீட்டிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சியின் சொத்துவரி, தொழில் வரி செலுத்தும் இறுதி நாள் ஞாயிற்றுக்கிழமையுடன் (மாா்ச் 31) முடிவடைகிறது. சென்னை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட சொத்து உரிமைதாரா்கள், வணிக நிறுவனங்களுக்கு அரை நிதியாண்டுக்கு ஒரு முறை சொத்துவரி, தொழில்வரி வசூலிக்கப்படுகிறது. அந்தவகையில், நடப்பு நிதியாண்டு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 31) முடிவடையவுள்ள நிலையில் மாநகராட்சியில் சாா்பில் சொத்துவரி வசூலிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வருவாய் துறை அதிகாரி கூறியது, மாநகராட்சி பகுதிகுட்பட்ட சொத்து உரிமைதாரா்கள் நடப்பு நிதியாண்டுக்கான சொத்துவரியையும், நீண்ட காலமாக நிலுவையிலுள்ள சொத்துவரியையும் ஞாயிற்றுக்கிழமைக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாத சொத்து உரிமைதாரா்களுக்கு மாதம் ஒரு சதவீதம் தனிவட்டி வசூலிக்கப்படும். நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாதவா்களின் சொத்துக்கள் ஜப்தி செய்ய மண்டல அளவில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பொதுமக்களுக்கு வரி செலுத்தும் வசதிக்காக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் மாநகராட்சி வருவாய் துறை அலுவலகம் செயல்படும். பொதுமக்கள் நிலுவையிலுள்ள வரி பாக்கியை மாநகராட்சி அலுவலகங்கள், அரசு இ-சேவை மையங்கள், மாநகராட்சி இணையதளம் வாயிலாக செலுத்தலாம் என்றாா் அவா். தொழில் உரிமம்: மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொழில்புரிவோா் 2024-25 நிதியாண்டுக்கான தொழில் உரிமத்தை புதுப்பிக்கும் காலம் மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் கூடுதல் காலஅவகாசம் வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை வைத்தனா். இந்நிலையில் தொழில் உரிமத்தை புதுப்பிக்கும் காலம் ஏப்.30-ஆம் தேதி வரை நீட்டித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com