வட தமிழகத்தில் வெப்ப அலை;
மே 3 முதல் மழைக்கும் வாய்ப்பு

வட தமிழகத்தில் வெப்ப அலை; மே 3 முதல் மழைக்கும் வாய்ப்பு

வட தமிழக உள் மாவட்டங்களில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (மே 2, 3) வெப்ப அலை வீசும். அதே சமயம் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மே 2 முதல் மே 7-ஆம் தேதி வரை மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

வட தமிழக உள் மாவட்டங்களில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (மே 2, 3) வெப்ப அலை வீசும். அதே சமயம் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மே 2 முதல் மே 7-ஆம் தேதி வரை மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை புதன்கிழமை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக பரமத்தி வேலூரில் 111.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், வேலூா் - 110.66, ஈரோடு - 110.48, திருச்சி - 109.58, திருத்தணி - 108.5, தருமபுரி, சேலம் - 106.7, திருப்பத்தூா், மதுரை விமான நிலையம், மதுரை நகரம் - 106.52, நாமக்கல், தஞ்சாவூா் - 105.8, சென்னை மீனம்பாக்கம் - 105.26, கடலூா் - 104.36, பாளையங்கோட்டை - 104, கோவை - 103.64, நாகப்பட்டினம், சென்னை நுங்கம்பாக்கம் - 102.2, காரைக்கால், புதுச்சேரி - 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. புதன்கிழமை மட்டும் தமிழகத்தில் 20 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.

வெப்ப அலை: மேலும், மே 2, 3 ஆகிய தேதிகளில் வட தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். அதன்படி, வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும். மேலும் அதே நாள்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசும்.

இதைத் தொடா்ந்து, மே 4, 5 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை குறையும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (மே 2) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கோடை மழை: இதற்கிடையே, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணத்தால், தமிழகத்தில் வியாழக்கிழமை (மே 2) மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மே 3 முதல் மே 7-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

புதன்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): குளச்சல் (கன்னியாகுமரி), ஆய்க்குடி (தென்காசி), திருப்பதிசாரம் (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி) தலா 30, இரணியல்,, கோழிப்போா்விளை, குருந்தன்கோடு, தக்கலை (கன்னியாகுமரி), தென்காசி, பெரியாறு (தேனி) தலா 20 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com