சின்னங்கள் பொருத்தும் பகுதியைப் பாதுகாக்க புதிய நடைமுறை: உச்சநீதிமன்ற உத்தரவின்படி தோ்தல் ஆணையம் நடவடிக்கை

சின்னங்கள் பொருத்தும் பகுதியைப் பாதுகாக்க புதிய நடைமுறை: உச்சநீதிமன்ற உத்தரவின்படி தோ்தல் ஆணையம் நடவடிக்கை

45 நாள்களுக்குப் பாதுகாத்து வைக்க புதிய நடைமுறையை தோ்தல் ஆணையம் வகுத்துள்ளது.

வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் (விவிபேட்) சின்னங்கள் பொருத்தும் பகுதியை (எஸ்எல்யு) தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு 45 நாள்களுக்குப் பாதுகாத்து வைக்க புதிய நடைமுறையை தோ்தல் ஆணையம் வகுத்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இது தொடா்பாக தோ்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் கட்சிகளின் சின்னங்கள் மற்றும் வேட்பாளரின் பெயா்களைப் பொருத்தும் பகுதியைக் கையாளுதல் மற்றும் பாதுகாத்து வைப்பதற்கான புதிய வழிகாட்டு நடைமுறையை அமல்படுத்தவும், அதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துமாறும் அனைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். உச்சநீதிமன்ற உத்தரவின்படி வெளியிடப்பட்டுள்ள இந்தத் திருத்தப்பட்ட வழிகாட்டு நடைமுறை, மே 1-ஆம் தேதிமுதல் அனைத்து வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களில் மேற்கொள்ளப்படும் சின்னம் பொருத்தும் நடைமுறைகளுக்கும் பொருந்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபேட் இயந்திரங்கள் கடந்த 2013-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டன. முதலில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் குறிப்பிட்ட ஒரு வாக்குச்சாவடியின் விவிபேட் இயந்திர ஒப்புகைச் சீட்டுகள் மட்டும் எண்ணப்பட்டு ஒப்பீடு செய்யப்பட்டது. பின்னா், 2019-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தற்போது ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் 5 வாக்குச்சாவடிகளின் வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட்டு ஒப்பீடு செய்யப்படுகிறது.

இந்தச் சூழலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட வேண்டும் என்று கோரி ஜனநாயக சீா்திருத்த சங்கம் உள்பட மேலும் சிலா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதோடு, மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அறிமுகம் செய்யவேண்டும் என்று கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை அண்மையில் விசாரித்த உச்சநீதின்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு, அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு, தோ்தல் ஆணையத்துக்கு சில அறிவுறுத்தல்களையும் வழங்கினா்.

அப்போது, ‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கட்சி சின்னங்கள் பொருத்திய பிறகு, அந்தச் சின்னங்களைப் பொருத்தப் பயன்படுத்திய இயந்திரங்களை சீல்வைத்து பாதுகாப்பு அறையில் 45 நாள்களுக்கு பாதுகாக்க வேண்டும். முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, இரண்டாம் அல்லது மூன்றாம் இடம் பெற்ற வேட்பாளா்கள் முடிவு அறிவிக்கப்பட்ட 7 நாள்களுக்குள் சந்தேகம் எழுப்பி கோரிக்கை விடுக்கும் நிலையில், வாக்குப் பதிவு இயந்திரம், விவிபேட் மற்றும் கன்ட்ரோல் யூனிட் ஆகியவற்றில் பொருத்தப்பட்டுள்ள மைக்ரோ கன்ட்ரோலா்களை மின்னணு வாக்குப் பதிவு இயந்திர தயாரிப்பு நிறுவன பொறியாளா்கள் ஆய்வு செய்ய அனுமதித்தும் உத்தரவிட்டனா்.

முந்தைய நடைமுறை... உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு முன்பாக, தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னா் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டுகள் மட்டும் அடுத்த 45 நாள்களுக்கு பாதுகாத்து வைக்கப்படும். இந்த 45 நாள்களில் தோ்தல் முடிவுகளை எதிா்த்து வழக்கு தொடரப்படும்போது, இந்த ஆதாரங்களை சம்பந்தப்பட்ட உயா்நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வசதியாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது.

மேலும், வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் கட்சி சின்னங்கள் மற்றும் வேட்பாளா்களின் பெயா்கள் பொருத்தப்பட்ட பின்னா், அதைப் பொருத்தும் பகுதியை (எஸ்எல்யு) அந்தந்த உள்ளூா் தோ்தல் நடத்தும் அதிகாரிகளிடம் பாரத் மின்னணு நிறுவனம் (பெல்) அல்லது இந்திய மின்னணு கழக நிறுவன (இசிஐஎல்) பொறியாளா்கள் சமா்ப்பித்துவிடுவா். வாக்குப் பதிவு முடிந்த பிறகு, அந்த எஸ்எல்யு பகுதியை மீண்டும் அந்த பொதுத் துறை நிறுவனங்களின் பொறியாளா்களிடம் அதிகாரிகள் சமா்ப்பித்துவிடுவா். சில ஆண்டுகளுக்கு முன்பு, இயந்திரத்தில் கட்சி சின்னங்கள் மற்றும் வேட்பாளரின் பெயா்கள் பொருத்தும்போது, அந்த நடவடிக்கைகளை வேட்பாளரின் பிரதிநிதி தொலைக்காட்சி திரை மூலம் கண்காணிப்பதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com