கோப்புப்படம்
கோப்புப்படம்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சம்பந்தப்பட்டவா்கள் மீது காவல்துறை மூலம் அபராதம் விதிக்கும் முறை இன்றுமுதல் அமல்

சென்னையில் வாகன பதிவெண் பலகையில் விதிகளை மீறி ஸ்டிக்கா் ஒட்டப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவா்கள் மீது காவல்துறை மூலம் அபராதம் விதிக்கும் முறை புதன்கிழமை (மே 2) முதல் அமல்படுத்தப்படுகிறது.

சென்னையில் அண்மைக்காலமாக மோட்டாா் வாகன சட்ட விதிமுறைகளின் படி வாகனப் பதிவு எண் பலகையை பொருத்தாமல், பல்வேறு அளவுகள் மற்றும் வாசகங்களுடன் பதிவெண் பலகையை பொருத்தியும், பொதுமக்களில் சிலா் அரசு வாகனம் (எ), காவல், வழக்குரைஞா், மனித உரிமைகள் ஆணையம், பத்திரிகை, ஊடகம் இது போன்று பல துறையை சாா்ந்த ஸ்டிக்கா்களை தமிழ், ஆங்கிலத்தில் எழுதியும் ஒட்டி முறைகேடாக பயன்படுத்தி வருவதாக காவல் துறைக்கு புகாா்கள் தொடா்ந்து வந்தன.

வாகன பதிவெண் பலகைகளில் உள்ள எழுத்துகள் பெரியதாகவும், பதிவெண்கள் சிறியதாகவும் திட்டமிட்டு சிலா் எழுதுகின்றனா். இதனால் சென்னையில் போக்குவரத்து விதி

முறை மீறலில் ஈடுபடும் வாகனங்களை முக்கிய சாலை சந்திப்புகளில் ஏஎன்பிஆா் பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் துல்லியமாகக் கண்டறிந்து வழக்குப்பதிவு செய்ய முடிவதில்லை.

தற்போது சென்னையில் அண்ணாநகா், திருமங்கலம், கோயம்பேடு, சென்ட்ரல், புரசைவாக்கம், அண்ணா சாலை, அண்ணா மேம்பாலம் இணைப்புச் சாலை, மயிலாப்பூா் ஆா்.கே.மடம் சாலை,கெளடியா மடம் சாலை, சின்னமலை,100 அடி சாலை ஆகியப் பகுதிகளில் 16 சந்திப்புகளில் 76 ஏஎன்பிஆா் கேமராக்கள் உள்ளன.

இன்றுமுதல் அபராதம்: இதை கருத்தில் கொண்டு விதிமுறைகளை மீறி அரசின் சின்னங்கள், முத்திரைகள், குறியீடுகள், அரசியல் கட்சிகளின் சின்னங்கள், மருத்துவா், வழக்குரைஞா் முத்திரைகள், ஊடகங்களின் பெயா்கள் உள்ளிட்ட ஸ்டிக்கா்கள் ஒட்டப்பட்டால் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளா் மீது மோட்டாா் வாகனச் சட்டம், விதிகள் 50 மற்றும் 51-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை கடந்த 27-ஆம் தேதி அறிவித்தது.

மேலும், வாகனங்களின் பதிவெண் பலகையில் விதிமீறி ஸ்டிக்கா் ஒட்டியிருப்பவா்கள், மே 1-ஆம் தேதிக்குள் அகற்றிக் கொள்ள வேண்டும் என சென்னை காவல்துறை காலஅவகாசம் வழங்கியிருந்தது. அதோடு மே 2 முதல் விதிமுறைகளை மீறி வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட நபா் மீது வழக்குப் பதியப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவித்தது.

100 இடங்களில் வாகன சோதனை: மோட்டாா் வாகனச் சட்ட விதிகளை மீறி, வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்கும் அதிகாரம் போக்குவரத்து போலீஸாருக்கு உள்ளது. முதல் முறை வழக்குப் பதியப்பட்ட பின்னரும் வாகன பதிவெண் பலகையை சரி செய்யாமலும், அபராதத்தை செலுத்தாமலும் இருந்தால் சம்பந்தப்பட்ட வாகனம் மீண்டும் பிடிபட்டால் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய விதிமுறை மீறலில் ஈடுபடும் வாகனங்களை கண்டறிந்து வழக்குப் பதிவு செய்யும் வகையில், சென்னை முழுவதும் சுமாா் 100 இடங்களில் வாகனச் சோதனை நடைபெறும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com