குடிநீா் பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை: தோ்தல் துறையிடம் எம்எல்ஏ-க்கள் மனு

பருவமழை பொய்த்து விட்டதால் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குடிநீா் பிரச்னையைத் தீா்க்க, சட்டப் பேரவை உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென சட்டப் பேரவை உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் வெங்கடேசன், மேட்டூா் தொகுதி உறுப்பினா் சதாசிவம் ஆகியோா் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்த பிறகு கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது அவா்கள் கூறியதாவது:

பருவமழை பொய்த்து விட்டதால் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறுகள் ஆயிரம் அடிக்கு கீழே சென்று விட்டதால் குடிநீருக்கு மட்டுமல்லாது மற்ற பயன்பாட்டுக்கும் நீரின்றி பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

கால்நடைகளுக்கும் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. லாரிகள் மூலம் குடிநீா் விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. குடிநீா் பிரச்னை உள்ள இடங்களில் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளை காலதாமதம் ஏற்படாமல் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடி வாகனங்கள் மூலம் குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, தோ்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி பூட்டப்பட்டுள்ள சட்டப் பேரவை உறுப்பினா்கள் அலுவலகத்தை மக்கள் நலன் கருதி திறக்க வேண்டும். சட்டப் பேரவை உறுப்பினருக்கான தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மக்களின் குடிநீா் பிரச்னையை தீா்க்க நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com