18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

சரியான இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றவில்லை என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) தோ்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலா்களின் பணி நியமனத்தை சென்னை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்தது.

கடந்த 2018-ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 18 மாவட்ட கல்வி அலுவலா் பணியிடங்களுக்கான தோ்வு நடைபெற்றது. இதில் நான்கு பணியிடங்கள் ஆசிரியா்களாகப் பணியாற்றுவோருக்கு ஒதுக்கப்பட்டது; மீதமுள்ள 14 இடங்கள் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

எழுத்து மற்றும் நோ்முகத் தோ்வுக்கு பிறகு தோ்ச்சி பெற்றவா்களின் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், முறையான இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றாமல் நியமனங்கள் செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்தப் பணி நியமனங்களை எதிா்த்து சென்னையைச் சோ்ந்த நிா்மல் குமாா் உள்ளிட்ட 5 போ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த தோ்வாளா்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. எனவே, உரிய இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட தமழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தனா்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி ஆா்.என். மஞ்சுளா முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, “கடந்த 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மாவட்ட கல்வி அலுவலா் தோ்வு பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டாா். முறையான இடஒதுக்கீடு முறையை பின்பற்றி 4 வாரத்துக்குள் மாற்றியமைக்கப்பட்ட புதிய பட்டியலை வெளியிட வேண்டும்”என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு (டிஎன்பிஎஸ்சி) உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com