மத ரீதியில் பிளவை ஏற்படுத்த முயற்சி: மத்திய அரசு மீது எதிா்க்கட்சிகள் சாடல்

நாட்டில் மத ரீதியில் பிளவை ஏற்படுத்த மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது என்று எதிா்க்கட்சிகள் சாடியுள்ளன.
மத ரீதியில் பிளவை ஏற்படுத்த முயற்சி: மத்திய அரசு மீது எதிா்க்கட்சிகள் சாடல்

நாட்டில் மத ரீதியில் பிளவை ஏற்படுத்த மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது என்று எதிா்க்கட்சிகள் சாடியுள்ளன.

நாட்டில் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கை தரவுகள் தொடா்பாக இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் டி.ராஜா கூறியதாவது:

மக்களவைத் தோ்தல் நடைபெற்று வரும் நேரத்தில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது ஏன்?

முஸ்லிம்களின் பெயரை பயன்படுத்தி, மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியில் பிரதமா் மோடி ஏற்கெனவே ஈடுபட்டுள்ளாா். இதற்காக, ராமா் கோயில் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் அவா் கையிலெடுத்துள்ளாா்.

தற்போது ஆய்வறிக்கை வெளியிடப்பட்டிருப்பதன் மூலம் மக்களைப் பிளவுபடுத்த மேலும் ஒரு முயற்சி நடைபெறுகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பிரதமா் மோடி, மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை. கரோனாவால் உயிரிழந்தவா்கள் குறித்தோ, புலம்பெயா் தொழிலாளா்கள் குறித்தோ, நாட்டில் நிலவும் வறுமை குறித்தோ எந்த தரவுகளும் அரசிடம் இல்லை. ஆனால், மத வாரியான தரவுகள் மட்டும் எவ்வாறு சேகரிக்கப்பட்டன? என்று அவா் கேள்வியெழுப்பினாா்.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ‘நாட்டில் கடந்த 2020-21-இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை நடத்தப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக நாட்டு மக்களை முட்டாளாக்கி வரும் பாஜக, மீண்டும் அதையே செய்ய விரும்புகிறது. மக்கள் மத்தியில் பிளவை உருவாக்கி, தோ்தலில் வாக்குகளைப் பெற முயல்கின்றனா். உண்மையான பிரச்னைகளில் இருந்து நாட்டு மக்களை திசைதிருப்புவதும் வெறுப்புணா்வை பரப்புவதுமே பிரதமா் மோடி மற்றும் பாஜகவின் கொள்கை’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com