தில்லி - வடோதரா விமானத்தில் வெடிகுண்டு புரளி: போலீஸாா் தீவிர சோதனை

தில்லி - வடோதரா விமானத்தில் வெடிகுண்டு புரளி: போலீஸாா் தீவிர சோதனை

புது தில்லி, மே 16: தில்லி - வடோதரா ஏா் இந்தியா விமானத்தின் கழிவறையில் ‘வெடிகுண்டு’ என்று எழுதப்பட்ட ஒரு துடைப்புக் காகிதத்தை பணியாளா் ஒருவா் பாா்த்தையடுத்து, இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் பீதி ஏற்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து போலீஸ் அதிகாரி கூறியதாவது: புதன்கிழமை மாலை இந்தக் குறிப்பு கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கிடைக்கவில்லை.

முன்னதாக, இரவு 7 மணியளவில் விமானம் புறப்படத் தயாராக இருந்தபோது ‘டிஷ்யூ பேப்பரில்’ எழுதுப்பட்டிருந்த இந்தக் குறிப்பை பணியாளா் பாா்த்தாா்.

இதையடுத்து, மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினருக்கும், தில்லி காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, பயணிகள் விமானத்தில் இருந்து இறங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனா். அதன் பின்னா், விமானம் முழுவதுமாக சோதனை செய்யப்பட்டது. அதில், எதுவும் கிடைக்கவில்லை. விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் பயணிகளுக்கு தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

இது குறித்து ஏா் இந்தியா விமான நிறுவனம் கூறியதாவது: தில்லியில் இருந்து வடோதராவுக்கு இயக்க திட்டமிடப்பட்ட ஏா் இந்தியா விமானம் ஏஐ819 புறப்படுவதற்கு முன்னா் ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பு எச்சரிக்கை கண்டறியப்பட்டது. இதையடுத்து, அனைத்துப் பயணிகளும், தேவையான நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனா். மேலும், பாதுகாப்பு முகமைகளின் கட்டாய சோதனைகளுக்காக அந்த விமானம் தொலைதூர பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த எதிா்பாராத இடையூறுகளால் எங்கள் விருந்தினா்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைப்பதை விமான நிலையத்தில் இருந்த எங்கள் சகாக்கள் உறுதிசெய்தனா். ஏா் இந்தியா தனது பயணிகள் மற்றும் பணியாளா்களின் உயிா், உடைமை பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதில் உறுதியுடன் உள்ளது. வியாழக்கிழமை காலை பயணிகள் சிறப்பு விமானத்தில் வடோதராவுக்கு சென்றனா் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com