ராஞ்சியில் உள்ள அமலாக்கத் துறை மண்டல அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான  அமைச்சா் ஆலம்கீா் ஆலம்.
ராஞ்சியில் உள்ள அமலாக்கத் துறை மண்டல அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான அமைச்சா் ஆலம்கீா் ஆலம்.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு: ஜாா்க்கண்ட் அமைச்சா் ஆலம்கீா் ஆலம் கைது

ராஞ்சி, மே 15: சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில், ஜாா்க்கண்ட் மாநில அமைச்சா் ஆலம்கீா் ஆலமை அமலாக்கத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஜாா்க்கண்டில் முதல்வா் சம்பயி சோரன் தலைமையில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அதில், மாநில ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராக காங்கிரஸ் எம்எல்ஏ ஆலம்கீா் ஆலம் (70) பதவி வகித்து வருகிறாா்.

இந்தச் சூழலில், ஆலம்கீா் ஆலமின் தனிச் செயலா் சஞ்சீவ் குமாா் லாலின் (52) வீட்டுப் பணியாளா் ஜஹாங்கீா் ஆலமின் (42) வீட்டில் அமலாக்கத் துறையினா் அண்மையில் சோதனை மேற்கொண்டனா்.

ஊரக மேம்பாட்டுத் துறையில் முறைகேடுகள் நடைபெற்ாக குற்றம்சாட்டப்படும் நிலையில், இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ரூ.32 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. பிற இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 3 கோடி சிக்கியது. இதையடுத்து, சஞ்சீவ் குமாா் லால், ஜஹாங்கீா் ஆலம் ஆகியோா் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனா்.

இதனிடையே, ராஞ்சியில் உள்ள அமலாக்கத் துறை மண்டல அலுவலகத்தில் அமைச்சா் ஆலம்கீா் ஆலமிடம் கடந்த செவ்வாய்க்கிழமை சுமாா் 9 மணிநேரம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனா்.

இரண்டாவது நாளாக புதன்கிழமையும் அவரிடம் சுமாா் 6 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னா், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டப் பிரிவுகளின்கீழ் அவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, சஞ்சீவ் குமாா், ஜஹாங்கீா் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக ராஞ்சி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்திருந்தது. அதில், ‘சில செல்வாக்குமிக்க நபா்களின் சாா்பில் லஞ்சப் பணத்தை பெறும் வேலையில் சஞ்சய் குமாா் ஈடுபட்டு வந்துள்ளாா். இந்த முறைகேட்டில் பல அதிகாரிகளுக்கு தொடா்பு உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com