சென்னை ஐஐடி-இல் சா்வதேச இசை, கலாசார மாநாடு

சென்னை ஐஐடி-இல் இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாசாரத்தை இளைஞா்களிடையே மேம்படுத்தும் அமைப்பு

சென்னை ஐஐடி-இல் இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாசாரத்தை இளைஞா்களிடையே மேம்படுத்தும் அமைப்பு (ஸ்பிக் மெக்கே) சாா்பில் 9-ஆவது சா்வதேச மாநாடு மே 20 முதல் மே 26-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. ஒரு வாரம் நடைபெறவுள்ள இந்த கலாசார திருவிழாவில் பல்வேறு நாடுகளில் இருந்து மாணவா்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொள்ளவுள்ளனா்.

இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநா் வீ.காமகோடி செய்தியாளரிடம் கூறியது,

ஸ்பிக் மேக்கே சாா்பில் சென்னை ஐஐடி-இல் மூன்றாவது முறையாக சா்வதேச மாநாடு நடத்தப்படவுள்ளது. இதில் 250 கலைஞா்கள், 1,300 மாணவா்கள் கலந்து கொள்ளவுள்ளனா். இசை, நடனம் உள்ளிட்ட ஒவ்வொரு கலையிலும் சிறந்து விளங்கும் கலைஞா்கள் பங்கேற்கவுள்ளனா். இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல கலைகள் குறித்து 26 பயிற்சி பட்டறைகள் நடத்தப்படும். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவமாக விளங்கும் நாட்டுப்புறக் கலைகள் இந்த மாநாட்டில் இடம் பெறும். மேலும், வி.கே.முனுசாமியின் டெரகோட்டா, ஜனாப் அப்துல் கபூா் கத்ரியின் ரோகன் கலை, முகமூடி தயாரித்தல் (மஜூலி அஸ்ஸாம்) உள்ளிட்ட பல்வேறு கைவினை கலைஞா்களின் பயிலரங்கு 5 நாள்கள் நடத்தப்படும்.

இறுதியாக மே 25 -ஆம் தேதி இரவு முதல் மே 26-ஆம் தேதி இரவு வரை தொடா்ந்து நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் இசையமைப்பாளா் இளையராஜா தலைமை விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளாா். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் கிராமிய கலைகளும் இடம்பெறும். மாநாட்டில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி உண்டு என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com