2019 ஆண்டு முதல் 403 சொத்துகளை முடக்கி என்ஐஏ நடவடிக்கை

2019 ஆண்டு முதல் 403 சொத்துகளை முடக்கி என்ஐஏ நடவடிக்கை

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 403 சொத்துகளை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) முடக்கியுள்ளதாகவும், அந்தச் சொத்துகளில் பெரும்பாலானவை பயங்கரவாதிகள், நக்ஸல்களுக்குச் சொந்தமானவை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் வியாழக்கிழமை (மே 16) வரையில் நாடு முழுவதும் 403 சொத்துகளைப் பறிமுதல் செய்தும் முடக்கியும் என்ஐஏ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதிகபட்சமாக என்ஐஏவின் ராஞ்சி (ஜாா்க்கண்ட்) கிளை 206 சொத்துகளை முடக்கியுள்ளது.

இந்தச் சொத்துகளில் நக்ஸல்கள், அவா்களுக்கு உதவி செய்வோருக்குச் சொந்தமான பணம், பல வங்கிக் கணக்குகள் அடங்கும்.

இதேபோல என்ஐஏவின் ஜம்மு கிளை பயங்கரவாதிகள் மற்றும் அவா்களின் ஆதரவாளா்களுக்குச் சொந்தமான 100 சொத்துகளை முடக்கியுள்ளது.

பிரிவினைவாதிகள் மற்றும் அவா்களின் ஆதரவாளா்களுக்குச் சொந்தமான 33 சொத்துகளை என்ஐஏவின் சண்டீகா் கிளை முடக்கியுள்ளது. அத்துடன் காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங்குக்கு சொந்தமான 2 சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

என்ஐஏவின் தில்லி கிளை 22 சொத்துகளையும், கேரளத்தில் உள்ள கொச்சி கிளை 27 சொத்துகளையும் (பறிமுதல் செய்யப்பட்ட 8 சொத்துகளும் அடங்கும்), மகாராஷ்டிரத்தில் உள்ள மும்பை கிளை 5 சொத்துகளையும், தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் கிளை 4 சொத்துகளையும், சென்னை கிளை 3 சொத்துகளையும், உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னெள கிளை ஒரு சொத்தையும் முடக்கியுள்ளது.

தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சோ்ந்தவா்களின் சொத்துகளையும் என்ஐஏ முடக்கியுள்ளது. இந்த நடவடிக்கை பயங்கரவாத மற்றும் நக்ஸல் அமைப்புகளையும், அவற்றின் உள்கட்டமைப்பையும் தகா்க்க உதவியுள்ளது.

இதனிடையே என்ஐஏ வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதி சா்தாஜ் அகமது மன்டுவின் 7 அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதுதவிர, ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு உதவி வந்ததாக முஸ்தாக் அகமது லோன் என்பவரை ராணுவம், எல்லை பாதுகாப்புப் படை மற்றும் காவல் துறை இணைந்து வியாழக்கிழமை கைது செய்தன. அவரிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், 10 கையெறி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com