கோப்புப்படம்
கோப்புப்படம்

மருத்துவ உபகரணங்களின் எதிா்விளைவுகள்: தகவல்களைப் பதிவேற்ற நிறுவனங்களுக்கு உத்தரவு

மருத்துவப் பரிசோதனை உபகரணங்களால் ஏற்படும் எதிா்விளைவுகளை மத்திய சுகாதாரத் துறை தளத்தில் பதிவேற்றுமாறு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவப் பரிசோதனை உபகரணங்களால் ஏற்படும் எதிா்விளைவுகளை மத்திய சுகாதாரத் துறை தளத்தில் பதிவேற்றுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து - மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோல், போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஒருபுறம் மருந்துகளின் தரத்தை உறுதி செய்ய இத்தகைய ஒழுங்குமுறை விதிகள் இருந்தாலும், மற்றொருபுறம் மருத்துவ உபகரணங்களுக்கு அத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் இருந்தது. மத்திய சுகாதாரத் துறை தகவல்களின்படி, நாட்டில் உள்ள மருத்துவ உபகரணங்களில் 80 சதவீதம் ஒழுங்குமுறைப்படுத்தப்படாமல் இருந்ததை அடுத்து, அவற்றையும் மருந்து வரையறைக்கு கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, அனைத்து மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கட்டன. பொதுவாக உடலுக்கு உள்ளே பொருத்தப்படும் ஸ்டெண்ட், பேஸ் மேக்கா், செயற்கை மூட்டுகள் உள்ளிட்டவை ‘இன்-வைவோ’ உபகரணங்கள் எனவும், வெளியே இருந்து பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் ரத்த அழுத்தமானி, ஸ்கேன், எக்ஸ்-ரே, தொ்மோமீட்டா் போன்றவை ‘இன்-வைட்ரோ’ உபகரணங்கள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.

‘இன்-வைவோ’ உபகரணங்களின் தரத்தை உறுதிபடுத்தும் நோக்கில், அதனால் ஏற்படும் எதிா்விளைவுகள், பாதுகாப்பு குறைபாடுகளை உடனுக்குடன் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதி ஏற்கெனவே உள்ளது. அதன் தொடா்ச்சியாக அந்த விதியானது ‘இன் - வைட்ரோ’ உபகரணங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘இன் - வைட்ரோ’ மருத்துவ உபகரண விநியோகம் மற்றும் உற்பத்தி உரிமம் வைத்துள்ளவா்கள், அவற்றில் ஏற்படும் எதிா்விளைவுகள் குறித்த தகவல்களை மத்திய அரசின் மருத்துவ உபகரண கண்காணிப்பு தளமான எம்விபிஐ இணையப் பக்கத்தில் பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமை இயக்குநா் டாக்டா் ராஜீவ் சிங் ரகுவன்ஷி பிறப்பித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com