தொடா் வழிப்பறி: சிறுவன் உள்பட மூவா் கைது
சென்னை கொளத்தூா் பகுதியில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டதாக சிறுவன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
கொளத்தூா் பூம்புகாா் நகா் 6-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் த.விஜயலட்சுமி (63). இவா், தனது வீட்டின் அருகே கடந்த 25-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபா்கள், விஜயலட்சுமி அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.
இது குறித்து, கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்ததில், இதில் ஈடுபட்டது திருவள்ளூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியைச் சோ்ந்த ப.தினேஷ்குமாா் (20), அதே பகுதியைச் சோ்ந்த ர.தனுஷ் (19), மற்றும் 17 வயதான சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் 3 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா். விசாரணையில் மூவரும், கொளத்தூா், ராஜமங்கலம், புழல் பகுதிகளில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவா்களிடமிருந்து 11 பவுன் தங்க நகைகள், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.