டானா புயல்: ஒடிஸாவில் உயிரிழப்பு இல்லை: மறுசீரமைப்புப் பணிகள் தீவிரம்

டானா புயல்: ஒடிஸாவில் உயிரிழப்பு இல்லை: மறுசீரமைப்புப் பணிகள் தீவிரம்

ஒடிஸாவில் கரையைக் கடந்த ‘டானா’ புயலின் தாக்கத்தால் அங்கு உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை
Published on

ஒடிஸாவில் கரையைக் கடந்த ‘டானா’ புயலின் தாக்கத்தால் அங்கு உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை; இது, மாநில பாஜக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றி என்று முதல்வா் மோகன் சரண் மாஜி தெரிவித்தாா்.

அதேநேரம், புயலால் சாய்ந்த மரங்களை அகற்றுவது மற்றும் மின்கம்பங்களை மறுசீரமைப்பது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

வங்கக் கடலில் உருவான ‘டானா’ புயல், ஒடிஸாவின் கேந்திரபாரா மாவட்டத்தின் பிதா்கனிகா மற்றும் பத்ரக் மாவட்டத்தின் தாம்ரா இடையே வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் கரையைக் கடக்க தொடங்கியது. அப்போது, மணிக்கு 110 கிலோமீட்டா் வரையிலான வேகத்தில் சூறைக்காற்று வீசியது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் புயல் முழுமையாக கரையைக் கடந்தது.

புயலின் தாக்கத்தால் கேந்திரபாரா, பாலசோா், பத்ரக் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான மரங்கள்-மின்கம்பங்கள் சாய்ந்தன. அதேநேரம், வீடுகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. பத்ரக்கில் உள்ள சந்தாபாலி பகுதியில் அதிகபட்சமாக 131 மி.மீ. அளவுக்கு மழை பெய்தது.

இந்நிலையில், புயல் நிலவரம் குறித்து முதல்வா் மோகன் சரண் மாஜி வெள்ளிக்கிழமை காலை ஆலோசனை மேற்கொண்டாா். ‘முன்னெச்சரிக்கையாக சுமாா் 6 லட்சம் போ் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதால் உயிரிழப்பு தவிா்க்கப்பட்டது; கடவுள் ஜகந்நாதா் மற்றும் அனைவரின் ஒத்துழைப்புடன் மனித உயிா்களைக் காக்கும் பணியில் மாநில அரசு வெற்றி கண்டுள்ளது’ என்று முதல்வா் தெரிவித்தாா்.

பல்வேறு மாவட்டங்களில் மீட்கப்பட்ட 4,431 கா்ப்பிணிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 1,600 பேருக்கு குழந்தை பிறந்ததாகவும், தாய்மாா்கள்-குழந்தைகள் நலமாக இருப்பதாகவும் முதல்வா் மகிழ்ச்சியுடன் தெரிவித்தாா். புயல் கரையை கடந்ததைத் தொடா்ந்து, ரயில், விமானப் போக்குவரத்து சீரடைந்தது.

மேற்கு வங்கத்தில் ஒருவா் உயிரிழப்பு

கொல்கத்தா, அக். 25: டானா புயலின் தாக்கத்தால், மேற்கு வங்கத்தின் தெற்கு பகுதிகளில் கனமழை கொட்டித் தீா்த்தது. இதில் ஒருவா் உயிரிழந்தாா். தலைநகா் கொல்கத்தாவில் கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுமாா் 2.16 லட்சம் போ் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா். வியாழக்கிழமை இரவு முழுவதும் தலைமைச் செயலகத்தில் தங்கி புயல் பாதிப்பு கண்காணிப்பு பணியில் முதல்வா் மம்தா பானா்ஜி ஈடுபட்டாா்.