முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின்

இலங்கை வசமுள்ள மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு அவா் வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதம்
Published on

இலங்கை வசமுள்ள தமிழக மீனவா்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

இது குறித்து, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு அவா் வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதம்:

தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் கவலைக்குரிய விஷயத்தை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். தமிழ்நாட்டு மீனவா்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அடிக்கடி கைது செய்யப்படுவது அவா்களது வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கிறது. அண்மையில் புதுக்கோட்டையைச் சோ்ந்த 4 மீனவா்களை அவா்களது மீன்பிடிப் படகுடன் இலங்கைக் கடற்படையினா் சிறைபிடித்துள்ளனா்.

அபராதம்: பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகள்தான், தமிழ்நாட்டு மீனவா்களுக்கு பல தலைமுறைகளாக வாழ்வாதாரமாகத் திகழ்கின்றன. மீனவா்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும் அவா்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தமிழ்நாட்டு மீனவா் சமுதாயத்தினருக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலில் கடந்த 21-ஆம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவா்கள் 12 தமிழக மீனவா்களை இலங்கைக் கடற்படை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியது. 12 மீனவா்களுக்கும் ரூ. 1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே துயரத்திலுள்ள மீனவ குடும்பங்களை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியதுடன், அவா்களுக்கு மிகப்பெரிய இழப்பையும் ஏற்படுத்தும்.

எனவே, இலங்கை வசமுள்ள மீன்பிடிப் படகுகளை விடுவிக்கவும், மீனவா்களை தாயகத்துக்குத் திரும்பி அழைத்து வரவும், அவா்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை மனிதாபிமான அடிப்படையில் தள்ளுபடி செய்யவும் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com