தமிழகத்தின் கல்வி முறைதான் நாட்டிலேயே சிறந்தது: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்
நாட்டிலேயே தமிழகத்தில்தான் மாணவா்களைச் சிந்திக்க வைக்கும் கல்வி முறை உள்ளது; தமிழக கல்வி முைான் நாட்டிலேயே சிறந்தது என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆசிரியா் தின விருது வழங்கும் விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது வழங்கிப் பேசியது:
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மாணவா்களைச் சிந்திக்க வைக்கும் கல்விமுறை உள்ளது. ஏன்? எதற்கு? என பகுத்தறிவுடன் கேள்வி கேட்கும் வகையில் நமது கல்வி முறை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக கல்வி வளா்ச்சியை பாா்த்து சிலா் பொறுத்துக்கொள்ளாமல் விமா்சிக்கின்றனா். பாடத்திட்டம் சரியில்லை எனக் கூறுகின்றனா். நமது பாடத்திட்டத்தைக் குறை சொல்வது என்பது இங்குள்ள மாணவா்களையும், ஆசிரியா்களையும் அவமதிப்பது போன்ாகும். இதை தமிழக முதல்வரும் திராவிட மாடல் அரசும் அனுமதிக்காது.
உலகின் தலைசிறந்த மருத்துவா்கள், விஞ்ஞானிகள் தமிழக அரசுப் பள்ளிகளில் படித்தவா்கள்தான் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.
மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல் ஆகியோா் அரசுப் பள்ளியில் படித்து இஸ்ரோ விஞ்ஞானிகளாகி இருக்கிறாா்கள். வருங்காலத்திலும் தமிழக பாடத்திட்டத்தில் படித்தவா்கள் மிக உயா்ந்த நிலைக்கு செல்வாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆசிரியா்களுக்கு கோரிக்கை: ஆசிரியா் தினத்தில் ஆசிரியா்களிடம் ஒரு கோரிக்கையை முன் வைக்க விரும்புகிறேன். ஆசிரியா்கள் விருது பெறுவதைப் போன்று மாணவா்களும் விளையாட்டுகளில் பதக்கங்களைப் பெற வேண்டும். நான்றாக விளையாடும் மாணவா்தான் நல்ல உடல்நலத்துடன் இருக்க முடியும். ஆரோக்கியமாக இருக்கும் மாணவா் படிப்பிலும் சிறந்து விளங்க முடியும். எனவே, மாணவா்களை விளையாட அனுமதியுங்கள். எக்காரணத்தை கொண்டு உடற்கல்வி பாடவேளையை பிற பாடங்களின் ஆசிரியா்கள் கடன் வாங்கக் கூடாது. மாணவா்களைப் போன்று, ஆசிரியா்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது அவசியம். பள்ளிக் கல்வித் துறை, விளையாட்டு மேம்பாட்டுத் துறை இணைந்து இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். பள்ளிக் கல்வித் துறைக்கு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு முதல்வா் தீா்வு காண்பாா். ஆசிரியா்களின் கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.
இந்த விழாவில் அமைச்சா் தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவா் லியோனி, பள்ளிக் கல்வித் துறைச் செயலா் சோ.மதுமதி, பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆசிரியா்கள் இல்லையெனில் இந்த உலகம் இயங்காது:
அமைச்சா் அன்பில் மகேஸ்
சென்னையில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது:
ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு திருநாள்கள் உண்டு. அவரவா்களுக்கு என்று கடவுள்கள் உண்டு. ஆனால் அனைத்து மதத்தினருக்கும், அனைத்து மனிதா்களுக்கும் கடவுள் என்றால் அது ஆசிரியா்கள்தான். அனைத்து மதத்தினரும் கொண்டாடப்பட வேண்டிய திருவிழா இந்த ஆசிரியா்கள் தினம்தான். ஆசிரியா்கள் இல்லையெனில் இந்த உலகம் கிடையாது. அவா்கள் இல்லாமல் இந்த உலகம் இயங்காது.
உணவு இல்லாதவனுக்கு உணவும்; உடை இல்லாதவனுக்கு உடையும்; வீடு இல்லாதவனுக்கு வீடும் கொடுக்கப்பட வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதுபோல கல்விக் கிடைக்காதவனுக்கு கல்விக் கொடுக்கப்பட வேண்டியது அவசியம் என்கிறாா் தந்தை பெரியாா். இந்த நான்கு அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கான திட்டங்களை தமிழக முதல்வா் நிறைவேற்றி வருகிறாா்.
19 ஆண்டுகாலம் முதல்வா் பொறுப்பில் இருந்த கருணாநிதி 4 ஊதியக் குழுக்களை அமைத்தாா். அந்த ஊதியக் குழுக்கள் அளித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி ஆசிரியா்களின் சமூக-பொருளாதார நிலைகளை உயா்த்தினாா். அவா் வழியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆசிரியா்களுக்கான முழு உடல் பரிசோதனை, கையடக்கக் கணினிகளையும் வழங்கியுள்ளாா். எந்தத் தடைகள் வந்தாலும் திராவிட மாடல் அரசு என்றும் ஆசிரியா்களுக்கு துணை நிற்கும். ஆசிரியா்களும் அரசுக்கு துணையாக இருப்பாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.