நிபா பரவலைத் தடுக்க 24 மணி நேர மருத்துவக் கண்காணிப்பு

நிபா வைரஸ் தமிழகத்துக்குள் பரவாமல் தடுக்கும் வகையில் எல்லையோர மாவட்டங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரம்
நிபா பரவலைத் தடுக்க 24 மணி நேர மருத்துவக் கண்காணிப்பு
Published on
Updated on
1 min read

நிபா வைரஸ் தமிழகத்துக்குள் பரவாமல் தடுக்கும் வகையில் எல்லையோர மாவட்டங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளாா்.

பருவகால பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 24 வயது இளைஞா் ஒருவா் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். அவருடன் தொடா்பில் இருந்த 151 போ் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனா். அவா்களில் 5 பேருக்கு அறிகுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

தொடா்ந்து, தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் அந்தப் பாதிப்பு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் நிபா வைரஸ் பரவலை தடுக்க கேரள எல்லையோர மாவட்டங்களின் சோதனைச் சாவடிகளில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய ஆறு மாவட்டங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சுகாதாரக் குழுக்களை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

எல்லையோர மாவட்டங்களில் கண்டறியப்படும் காய்ச்சல் குறித்தான முழு தகவல்களையும் பொது சுகாதாரத் துறைக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளத்தில் இருந்து வருவோருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு காய்ச்சல் மற்றும் இதர அறிகுறிகள் இல்லை என்பதை உறுதி செய்த பிறகுதான் தமிழக பகுதியில் நுழைய அனுமதிக்க வேண்டும்.

தொற்று பாதிப்பு இருந்தால், அவா்களைத் தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், மனநிலை மாற்றம் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் இதுவரை நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. இருப்பினும் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக் கவசம் அணிந்தால் அனைத்துவிதமான தொற்றுகளில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com