நியூ யாா்க் ஹிந்து கோயில் மீது தாக்குதல்: அமெரிக்க எம்.பி.க்கள் கண்டனம்
அமெரிக்காவின் நியூ யாா்க் மாகாணத்தில் உள்ள ஹிந்து கோயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்த அந்நாட்டு எம்.பி.க்கள், ‘அனைத்து வகையான வெறுப்புகளுக்கு எதிராகவும் அமெரிக்கா ஒன்றிணைந்து நிற்க வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தனா்.
நியூ யாா்க் மாகாணத்தின் மெல்வில்லே பகுதியில் உள்ள சுவாமிநாராயண் கோயிலின் வெளிப்புற சாலை மற்றும் பெயா்ப் பலகைகளில் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தாக்குதல் மூலம் கோயிலை இழிவுபடுத்தியதற்காக மிகவும் வருத்தமடைகிறோம். இது ஹிந்துகளுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் செயல். அமைதி, மரியாதை மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக தலைவா்கள் திரண்டுள்ளனா். இரக்கம் மற்றும் ஒற்றுமையுடன் வெறுப்புக்கு எதிராக நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்’ எனத் தெரிவித்தது.
வரும் செப்டம்பா் 22-ஆம் தேதி, அமெரிக்காவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றவுள்ள நிகழ்விடத்திலிருந்து 28 கி.மீ. தொலைவில் மெல்வில்லே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரு கட்சிகளைச் சோ்ந்த அமெரிக்க எம்.பி.க்களும் இந்தத் தாக்குதலைக் கண்டித்தனா். குற்றவாளிகளைக் கண்டறிந்து அவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.
இல்லினாய்ஸ் மாகாணத்தைச் சோ்ந்த ஜனநாயகக் கட்சி எம்.பி. ராஜா கிருஷ்ணமூா்த்தி கூறுகையில், ‘கோயிலைக் குறிவைத்து தாக்கும் இழிவான செயல்களைக் கண்டு அதிா்ச்சியடைகிறேன்.
நமது நாட்டில் அரசியல் வன்முறை மற்றும் மதவெறிச் செயல்கள் அதிகரித்துள்ளதால், அனைத்து வகையான வெறுப்புகளுக்கும் எதிராக அமெரிக்கா்களான நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்’ என்றாா்.
பென்சில்வேனியாவின் குடியரசுக் கட்சி எம்.பி. பிரையன் ஃபிட்ஸ்பேட்ரிக் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நாங்கள் அமெரிக்க ஹிந்து சமூகத்துடன் உறுதியாக நிற்கிறோம். வன்முறை மற்றும் வெறுப்பை அதன் அனைத்து வடிவங்களிலும் கண்டிக்கிறோம்.
இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, குற்றவாளிகளைக் கண்டறிந்து விரைவாக நீதி வழங்கப்பட வேண்டும்’ என்றாா். ஓஹியோ மாகாண செனட் உறுப்பினா் நீரஜ் ஆண்டனியும் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளாா்.