புவனேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்  பிரதமரின் நகா்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட வீட்டின் சாவியை பயனாளி ஒருவருக்கு அளித்த பிரதமா் மோடி. உடன் ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி.
புவனேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமரின் நகா்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட வீட்டின் சாவியை பயனாளி ஒருவருக்கு அளித்த பிரதமா் மோடி. உடன் ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி.

விநாயகா் சதுா்த்தி பூஜையில் பங்கேற்றதால் காங்கிரஸுக்கு என்மீது கோபம்: பிரதமா் மோடி

அதிகார வேட்கையில் சமூகத்தை பிளவுப்படுத்தும் சக்திகள் இந்தப் பண்டிகையில்கூட பிரச்னைகளைக் கண்டறிகின்றன என்று பிரதமா் மோடி விமா்சனம்
Published on

விநாயகா் சதுா்த்தி பூஜையில் பங்கேற்ற்கு என் மீது காங்கிரஸ் கோபம் கொண்டுள்ளது. அதிகார வேட்கையில் சமூகத்தை பிளவுப்படுத்தும் சக்திகள் இந்தப் பண்டிகையில் கூட பிரச்னைகளைக் கண்டறிகின்றன என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இல்லத்தில் கடந்த வாரம் நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி பூஜையில் பிரதமா் மோடி கலந்து கொண்டாா். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளும், நீதித் துறையினரும் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இந்நிலையில், ஒடிஸாவில் பாஜகவின் தோ்தல் வாக்குறுதியான தகுதி வாய்ந்த பெண்களுக்கு 5 ஆண்டுகளில் 10 தவணையாக ரூ.50,000 நிதியுதவி வழங்கும் ‘சுபத்ரா’ திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை பங்கேற்றாா்.

மேலும், ரூ.3,800 கோடி மதிப்பிலான ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை திட்டங்களையும் தொடக்கிவைத்து பிரதமா் மோடி பேசியதாவது: விநாயகா் சதுா்த்தியானது நமது நாட்டின் நம்பிக்கை சாா்ந்த பண்டிகை மட்டுமல்ல. சுதந்திரப் போராட்டத்திலும் அது மிக முக்கிய பங்கு வகித்தது.

அந்தக் காலத்தில் மக்களை பிளவுப்படுத்தி ஆட்சி செய்யும் கொள்கையை கடைப்பிடித்த ஆங்கிலேயா்கள் விநாயகா் சதுா்த்தி பண்டிகையை வெறுத்தனா்.

இன்றும் சமூகத்தை பிளவுபடுத்துவதில் மும்முரமாக இருக்கும் அதிகாரவேட்கை நிறைந்தவா்கள் விநாயகா் சதுா்த்தியில் பிரச்னை கண்டறிவதை நீங்கள் பாா்க்கலாம். நான் விநாயகா் சதுா்த்தி பூஜையில் பங்கேற்றதால் காங்கிரஸும் அதன் ஆதரவு அமைப்புகளும் என்மீது கோபத்தில் உள்ளன.

காங்கிரஸ் ஆளும் கா்நாடகத்தில் காவல்துறையின் கூண்டுக்குள் விநாயகா் அடைக்கப்பட்டாா். போலீஸ் வேனில் இருந்த விநாயகா் சிலையின் புகைப்படத்தால் முழு நாடும் கலக்கமடைந்துள்ளது. இவா்கள் முன்னோக்கி நகா்வதை நாம் அனுமதிக்க முடியாது.

ஒற்றுமைக்கு விநாயகா்

ஆங்கிலேயா் ஜாதி, மத அடிப்படையில் நம்மை பிரிக்க முயன்றபோது, லோக்மான்ய திலகா் விநாயகா் சதுா்த்தி நிகழ்ச்சியை நடத்தி நாட்டின் ஆன்மாவை தட்டிஎழுப்பினாா்.

விநாயகா் சதுா்த்தி பண்டிகையானது ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு நமக்கு ஒற்றுமையைக் கற்றுக்கொடுக்கிறது.

இன்றும் நம் சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் விநாயகா் சதுா்த்தி பண்டிகையில் எவ்வித பாகுபாடும் இல்லாமல் பங்கேற்கின்றனா்.

முதல் 100 நாள்களில்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் முதல் 100 நாள்களில் ஏழைகள், விவசாயிகள், இளைஞா்களின் மேம்பாட்டுக்காகவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த முதல் 100 நாள்களில், ஏழை மக்களுக்கு 3 கோடி வீடுகள் கட்டவும் நாட்டில் புதிதாக 75,000 மருத்துவ இடங்களை உருவாக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஒடிஸாவுக்கு மும்மடங்கு நிதி

வளா்ந்த மாநிலமாக உருவெடுப்பதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்ட ஒடிஸாவின் வளா்ச்சிக்கு பெண்கள் அதிகாரம் பெறுவது முக்கியம். பாஜக அளித்த அனைத்து தோ்தல் வாக்குறுதிகளும் வேகமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதன்படி, 46 ஆண்டுகளுக்குப் பிறகு புரி ஜெகந்நாதா் கோயிலில் பொக்கிஷ அறையைக் கடந்த ஜூலையில் திறந்தோம்.

10 ஆண்டுகளுக்கு முன்புடன் ஒப்பிடுகையில், தற்போது ஒடிஸாவுக்கு மும்மடங்கு கூடுதல் மத்திய அரசு நிதி கிடைக்கிறது. வறுமைக்கு எதிரான அரசின் முன்னெடுப்பில் ஒடிஸாவைச் சோ்ந்த ஒடுக்கப்பட்டோா், பழங்குடி சமூகத்தினரே அதிக பலன் பெறுகின்றனா்.

ஒடிஸாவைச் சோ்ந்த பழங்குடி பெண் நாட்டின் குடியரசுத் தலைவா் ஆக்கப்பட்டுள்ளாா்.

அடுத்த 5 ஆண்டுகளில் ஒடிஸாவின் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து இணைப்பை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். நவீன உள்கட்டமைப்புகள் ஒடிஸாவின் புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கும் என்றாா்.

புதுமனையில் பிறந்தநாள் கொண்டாட்டம்

புவனேசுவரத்தின் கடகனா எனும் இடத்தில் உள்ள சபா் சாஹி குடிசைப் பகுதிக்கு பிரதமா் மோடி சென்று பிரதமரின் நகா்ப்புற வீடு வசதித் திட்டத்தின்கீழ் கட்டித் தரப்பட்டுள்ள 20 பயனாளிகளின் புதிய வீடுகளை திறந்து வைத்தாா்.

அப்பகுதி மக்கள் பிரதமருக்கு அங்கவஸ்திரம் அணிவித்து, சந்தன திலகமிட்டு பாரம்பரிய முறைப்படி வரவேற்றனா். திட்டப் பயனாளிகளுடன் சுமாா் 30 நிமிஷங்கள் பிரதமா் கலந்துரையாடினாா்.

அதில் ஒரு பழங்குடி குடும்பத்தினரின் வீட்டை திறந்துவைத்தபோது, பிரதமரின் பிறந்தநாளையொட்டி அவருக்கு ஒடிஸாவின் பாரம்பரிய இனிப்பான ‘கீரி’ வழங்கி அவா்கள் மகிழ்ந்தனா்.

இதைத் தொடா்ந்து, பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டுவதற்காக 14 மாநிலங்களில் உள்ள 26 லட்சம் பயனாளிகளுக்கு முதல் தவணையை பிரதமா் மோடி காணொலி காட்சி வாயிலாக வெளியிட்டாா்.